த ராஜா சாப் - விமர்சனம்

09 Jan 2026

பிரபாஸ் நடிப்பில், மாருதி இயக்கத்தில் உருவான 'த ராஜா சாப்' திரைப்படம், தெலுங்கு சினிமாவின் பிரமாண்டமான எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது.

'பாகுபலி' போன்ற வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பிரபாஸ் தனது இமேஜை மாற்றி ஆக்‌ஷன் ஹீரோவாக மாற முயன்றபோது சந்தித்த தோல்விகளுக்குப் பிறகு, இந்த ஹாரர்-காமெடி-ஃபேண்டஸி கலந்த படம் அவருக்கு மீண்டும் வெற்றியைத் தருமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், படத்தின் கதை, திரைக்கதை மற்றும் நடிப்பு ஆகியவை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், இது ஒரு சுமாரான பொழுதுபோக்கு படமாகவே அமைந்துள்ளது. இருப்பினும், சில விஷுவல் ட்ரீட்கள் மற்றும் பிரபாஸின் ஸ்கிரீன் பிரசன்ஸ் ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்தலாம். .

காணாமல் போன தாத்தாவைத் தேடும் பயணத்தில் இறங்கும் பிரபாஸ், அவர் ஒரு சக்திவாய்ந்த மந்திரவாதி என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைகிறார். சஞ்சய் தத் அந்த மந்திரவாதியாக தோன்ற, பிரபாஸுக்கு அவருடன் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலுக்குப் பின்னால் உள்ள ரகசியங்கள், பிரபாஸின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகின்றன ? அவர் எப்படி இந்த சவால்களை சமாளிக்கிறார் ? என்பதை திகில், மேஜிக், ஆக்ஷன் கலந்து சொல்ல முயன்றிருக்கிறது படக்குழு. ஆனால், கதைக்கு புதுமை இல்லாதது பெரும் குறை.

பாகுபலி புகழுக்குப் பிறகு, பிரபாஸ் பல பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் நடித்தாலும் அவை பாக்ஸ் ஆஃபீஸில் சொதப்பியதால், இந்த மசாலா டைப் படத்திற்கு திரும்பியிருக்கிறார். இருந்தாலும், இதிலும் அவரது நடிப்பு சோர்வாகவே தெரிகிறது. கதை இல்லாத இடங்களில் ஏனோ தானோ என நடந்து செல்கிறார். பில்டப் காட்சிகள் ஏராளம் இருந்தாலும், அவை திரைக்கதையை இழுத்தடிக்கச் செய்கின்றன. பிரபாஸின் கேரக்டர் டெவலப்மெண்ட் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.

மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும், அவர்களுக்கு சரியான முக்கியத்துவம் இல்லை. பேய் மாளிகையில் அடைக்கப்பட்டு, பாடல்களுக்கும் கிளாமருக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர். இது சினிமாவின் பழைய டெம்ப்ளேட் போலவே இருக்கிறது.

சஞ்சய் தத் மற்றும் ஜரினா வாகப் ஆகியோரின் நடிப்பு ஓகே ரகம், ஆனால் அவர்களது கேரக்டர்கள் படத்துக்கு பெரிய ப்ளஸ் இல்லை. பொம்மன் இரானி போன்றோர் வந்து போகும் கெஸ்ட் ரோல்கள், அவ்வளவு இம்பேக்ட் இல்லை.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் வொர்க் படத்தின் ஹைலைட் – விஎஃப்எக்ஸ் குறைபாடுகளை மறைத்து, கலர்ஃபுல் விஷுவல்களைத் தந்திருக்கிறார். தமன் இசையில் பாடல்கள் கமர்ஷியலாக இருந்தாலும், பின்னணி இசை சில இடங்களில் அதிக சத்தமாக இருந்து தொந்தரவு செய்கிறது.

திரைக்கதை மெதுவாக நகர்வது, தேவையற்ற காட்சிகள், பழைய ஸ்டைல் கதை எனக் குறைகள் இருந்தாலும், எடிட்டர் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் 3 மணி நேரத்துக்கும் மேல் நீளத்தை வைத்திருப்பது பெரும் தவறு. இயக்குநர் மாருதி, பிரபாஸுக்கு ரெஸ்ட் கொடுக்கும் வகையில் மூன்று ஹீரோயின்களை வைத்து 'ஒத்தடம்' கொடுத்திருக்கிறார் போலத் தோன்றுகிறது.

மொத்தத்தில், காதல், காமெடி, திகில் எல்லாம் இருந்தாலும் அவை ரசிக்கும்படி இல்லாதது படத்தின் பெரும் மைனஸ். ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம், ஆனால் பெரிய எதிர்பார்ப்புகளுடன் போக வேண்டாம் – இது ஒரு லைட்-ஹார்ட் டைம் பாஸ் மட்டுமே.

Tags: the raja saab, prabhas

Share via: