நல்ல கதைக் கருவைத் தேர்வு செய்திருந்தாலும், அதை இன்னும் சிறப்பான திரைக்கதை அமைத்து பரபரப்பாகக் கொடுத்திருக்கலாம் இந்த ‘லில்லி ராணி’ படக்குழு.

ஒரு விலை மாது தன்னுடைய நோய்வாய்ப்பட்டுள்ள தனது குழந்தையைக் காப்பாற்ற அதன் அப்பா யார் என்பதைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இருவர் மீதுதான் அவருக்கு சந்தேகம். அவர்களை சந்தித்து உண்மையைச் சொல்கிறார். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்களா ?, அந்த விலை மாது தனது குழந்தையைக் காப்பாற்றினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விலைமாது கதாபாத்திரத்தில் ‘திருடா திருடி’ படக் கதாநாயகி சாயா சிங் நடித்துள்ளார். தனது குழந்தையைக் காப்பாற்ற எப்படியாவது அக்குழந்தையின் அப்பாவைக் கண்டுபிடிக்க வேண்டும் என தைரியமாகக் களமிறங்குகிறார். இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் பொதுவாகவே நடிகைகள் நடிக்கத் தயங்குவார்கள். ஆனால், சாயா சிங் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து துணிச்சலாக நடித்திருக்கிறார்.

போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா, அமைச்சர் மகனான துஷ்யந்த் ஆகியோர் மீதுதான் சாயா சிங்குக்கு சந்தேகம். இவர்கள் மூவரைச் சுற்றித்தான் படத்தின் ஒன்றரை மணி நேரக் கதையும் நடக்கிறது. தம்பி ராமையா, துஷ்யந்த் இருவரும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.

ஒரு பரபரப்பான படத்துக்குரிய கதைக்கரு, இன்னும் காட்சிகளைச் சேர்த்து ஒரு முழு நீள ‘க்ரைம் திரில்லர்’ படமாகக் கொடுத்திருக்கலாம்.