அறிவியல் கதையில் அம்மா சென்டிமென்ட்டை இணைத்து நெகிழ்ச்சியான, சுவாரசியமான படமாகக் கொடுத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் தனது முதல் படத்திலேயே கனமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஷர்வா, சதீஷ், ரமேஷ் திலக் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். ஒரே அறையில் தங்கியுள்ளார்கள். அவர்கள் விஞ்ஞானியான நாசரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்று வருகிறது. டைம் மிஷின் ஒன்றைக் கண்டுபிடித்து அதன் மூலம் கடந்த காலத்திற்கு செல்லும் ஆராய்ச்சியை செய்து முடித்துள்ளார் நாசர். அது பற்றி ஷர்வாவிடம் சொல்கிறார். தனது பள்ளி நாட்களில் அம்மாவை இழந்த ஷர்வா, மீண்டும் அந்த காலத்திற்குப் பயணித்து தனது அம்மா உயிரைக் காப்பாற்ற நினைக்கிறார். டைம் மிஷின் மூலம் 1998ம் ஆண்டிற்குப் பயணிக்கிறார்கள் ஷர்வாவும், அவரது நண்பர்களும். தனது ஆசையை ஷர்வா நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

டைம் மிஷின் பற்றிய கதை என்றாலே சுவாரசியமாக இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். ஆனால், அம்மா சென்டிமென்ட்டை அதிகமாக சேர்த்திருக்கிறார்கள். அம்மாவாக 80களின் முன்னணி கதாநாயகியான அமலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருப்பதால் அதுவும் படத்திற்கு பலத்தைக் கொடுத்திருக்கிறது.

1998ம் ஆண்டையும் கதை நடக்கும் 2019ம் ஆண்டையும் இணைத்து திரைக்கதை அமைத்து அதைக் குழப்பமில்லாமல் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக். 

சென்டிமென்ட் காட்சிகளில் ஷர்வா எமோஷனலாக நடித்திருக்கிறார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்குப் பிறகு அவருக்குத் தமிழில் சரியான படமாக இப்படம் வெளிவந்துள்ளது. சதீஷ், ரமேஷ் திலக் இருவரும் நண்பர்களாக கலகலப்பூட்டுகிறார்கள். விஞ்ஞானியாக நாசர், வயதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரிது வர்மா சில காட்சிகளில் வந்தாலும் கிளைமாக்சில் அவருக்கான முக்கியத்துவம் உள்ளது.

சயின்ஸ் பிக்ஷன் படமென்றால் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஒரு எளிமையான சயின்ஸ் பிக்ஷன் படத்தை அற்புதமான சென்டிமென்ட்டுடன் கலந்து கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

இடைவேளை வரை மெதுவாக நகரும் கதை மட்டுமே சிறு குறையாகத் தெரிகிறது. சில காட்சிகளில் இன்னும் கூட சுவாரசியத்தைக் கூட்டியிருக்கலாம்.

குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய ஒரு நிறைவான படம்.