சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், சரண் குமார் இசையமைப்பில், விஷ்வா, சாய் தன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம்.

ஒரு த்ரில்லர் கதையை சரியான சஸ்பென்ஸ் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதே சமயம் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு இருந்திருந்தால் பரபரப்பான ஒரு படமாகவும் இருந்திருக்கும்.

பெண்களுக்கு உதவி செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ‘காவலன்’ மொபைல் ஆப்பிற்கு ஆபத்தில் இருக்கும் ஒரு பெண் அழைப்பு விடுக்கிறார். சப் இன்ஸ்பெக்டரான ரியா, அந்த இடத்தைத் தேடிப் போன போது வேறொரு பெண் அங்கு தூக்கில் தொங்கி இறந்து கிடக்கிறார். அதன் பிறகு வழக்கு ரியாவின் முன்னாள் கணவரான, பாரன்சிக் இன்ஸ்பெக்டர் விஷ்வாவிடமும் ஒப்படைக்கப்படுகிறது. அவருடைய மேல் விசாரணையில் பெண் தூக்கு மாட்டி இறந்த வீட்டில் அந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவரும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். தங்களுக்கு காவலன் ஆப் மூலம் அழைப்பு விடுத்த பெண் எங்கிருக்கிறார் என போலீஸ் குழு தேடுகிறது. அவர்கள் காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கோவை அருகில் வேடப்பட்டி என்ற ஊரின் பின்னணியில் கதை சொல்லப்பட்டுள்ளது. சினிமாத்தனமாக இல்லாமல் யதார்த்தமாக கதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். 

போலீஸ் இன்ஸ்பெக்டராக விஷ்வா, சப் இன்ஸ்பெக்டராக ரியா, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக சாய் தன்யா ஆகியோர்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். மூவருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள். சாய் தன்யாவின் கதாபாத்திர அறிமுகத்தில்தான் படம் ஆரம்பமாகிறது. ஆரம்பக் காட்சிகளில் கொஞ்சம் குழப்புகிறார் இயக்குனர். அப்புறம்தான் படம் சரியான திசையில் நகர்கிறது.

யார் கொன்றார்கள் என்ற சஸ்பென்ஸ் கிளைமாக்ஸ் வரை காப்பாற்றப்பட்டுள்ளது. கொலைகளுக்கான காரணம் இதுதான் என்று தெரிய வரும் போது அதிர்ச்சி. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காரணத்தை இதுவரை அதிகம் சொன்னதில்லை. அதைத் துணிச்சலுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மேக்கிங்கில் கொஞ்சம் செலவழித்து ரிச்சாக எடுத்திருந்தால் பேசப்படும் படமாகவும் அமைந்திருக்கும்.