‘விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு கௌதம் வாசுதேவ் மேனன், ஏஆர் ரகுமான், சிம்பு கூட்டணியில் வந்துள்ள மூன்றாவது படம் இது.

தமிழ்நாட்டின் தென் பகுதியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் இருந்து வறுமை காரணமாக மும்பைக்கு வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞன், அங்கு படிப்படியாக ‘டான்’ ஆக வளர்ந்து நிற்பதுதான் இந்த முதல் பாகத்தின் கதை.

படத்தின் ஆரம்பத்தில் தென் தமிழ்நாட்டின் முள் காட்டையும், முத்து என்கிற ஏழை இளைஞனையும் வித்தியாசமான தோற்றத்தில் காட்டி நம்மை படத்துக்குள் இழுக்கிறார் கௌதம் மேனன். இடைவேளை வரை மும்பையில் ஒரு பரோட்டா கடையில் வேலை செய்து, அந்தக் கடையின் மாடியில் 20, 30 பேருடன் தங்கியிருந்து வாழ்க்கையைக் கடத்தும் அந்த முத்துவின் இயலாமையை மிக இயல்பாய் சித்தரித்திருக்கிறார் இயக்குனர். முத்துவாக சிம்பு, இப்படியெல்லாம் கூட தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பாரா என காட்சிக்குக் காட்சி ஆச்சரியப்பட வைக்கிறார்.

படத்தின் ஆச்சரியங்கள் அனைத்துமே இடைவேளை வரை நீடிக்கிறது. அதற்குப் பிறகு இதற்கு முன் சில பல படங்களில் பார்த்த தாதாக்கள் போட்டி கதைக்குள் படம் செல்கிறது. அதன்பிறகு ஒரு கமர்ஷியல் மசாலா படமாகத்தான் நகர்ந்து முடிகிறது படம்.

பரோட்டா கடையில் வேலை என்று அழைத்துக் கொண்டு போய், அங்கு பகலில் வேலை செய்பவர்களை, இரவு நேரத்தில் அடியாட்களாக கொலை, கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களைச் செய்யச் சொல்கிறது ஒரு கும்பல். அப்படிப் போய் சிக்கிக் கொள்பவர்தான் சிம்பு. ஒரு சந்தர்ப்பத்தில் அந்தக் கூட்டத்தின் தலைவனுக்கே ‘பாடிகார்ட்’ ஆகும் அளவிற்கு தன் திறமையை வளர்த்துக் கொள்கிறார். பரோட்டா கடை முத்துவாக இருக்கும் வரை சாதாரண டிரஸ், கொஞ்சம் டல்லான தோற்றம், தளர்வான நடை என இருப்பவர் ‘பாடிகார்ட்’ ஆன பிறகு பாடி லேங்குவதை அப்படியே மாற்றியிருக்கிறார். படம் முடியும் போது இரண்டாம் பாகத்திற்கான ‘லீட்’ கொடுக்கிறார்கள். அதில் ‘கேஜிஎப் 2’ நாயகன் யஷ் போல தாடி, கோட், சூட் என மிரட்டுகிறார்.

குறைவான காட்சிகள் என்றாலும் பாந்தமாக நடித்து யார் இவர் எனக் கேட்க வைக்கிறார் புதுமுகம் சித்தி இத்னானி. இவருக்கும் சிம்புவுக்குமான காதல் சிறு சுவாரசியம்.

சிம்புவுடன் வேலை செய்யும் அப்புக்குட்டி, சிம்புவுக்கு பாஸாக இருக்கும் சரா, இவரின் எதிர் கோஷ்டியாக இருக்கும் சித்திக், சிம்புவின் அம்மாவாக ராதிகா, சிம்பு பாஸைக் கொல்ல வரும் ஜாபர் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் பொருத்தமாய் நடித்திருக்கிறார்கள்.

ஏஆர் ரகுமான் இசையில், ‘மல்லிப் பூ, மறக்குமா நெஞ்சம்’ ரசிகர்களை ஏற்கெனவே கவர்ந்த பாடல்கள். பின்னணி இசையிலும் தனித்துவம் காட்ட நிறைய முயற்சித்திருக்கிறார். ஒளிப்பதிவு, கலை இயக்கம் படத்திற்கான கூடுதல் பலம்.

இடைவேளைக்குப் பிறகு தாதாக்கள் போட்டி, ஒருவரை மற்றவர் கொல்ல முயற்சிப்பது, துப்பாக்கியைத் தூக்கி ஆளாளுக்கு கொலை செய்வது, எந்த இடத்திலும் தமிழ் சினிமாவின் வழக்கம் போல போலீஸ் வராமல் இருப்பது என அப்படியே கமர்ஷியல் சினிமா பக்கம் தாவிவிட்டார் கௌதம் மேனன்.