ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில், ஷபிர் இசையமைப்பில், அருண் விஜய், பாலக் லால்வானி மற்றும் பலர் நடித்துள்ள படம்.

சமூகத்தில் நடக்கும் எத்தனையோ குற்றங்களைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் மட்டுமே கருத்துக்களைப் பதிவு செய்பவர்கள் பல பேர். அத்துடன் தங்கள் கடமை முடிந்து போவதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு அநீதி நடந்தால் ஒவ்வொருவரும் தனி மனிதக் கோபத்துடன் அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும் என்று சொல்கிறார் இயக்குனர் குமரவேலன்.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் அருண் விஜய் கடமை தவறாத காவல் அதிகாரியாக இருக்க நினைக்கிறார். காதல் திருமணம் செய்து கொண்ட மனைவி பாலக் லால்வானி, ஒரு பெண் குழந்தை என அவரது குடும்ப வாழ்க்கை இருக்கிறது. ஒரு நாள் பாலக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். மேலும் அவர் மனைவி மீது பழி சொல்லும் விழுகிறது. வெகுண்டெழும் அருண் விஜய் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தன் மனைவி மீதான அவப் பெயரைப் போக்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

போலீஸ் கதாபாத்திரம் என்றாலே ஃபிட்டான நடிப்பைக் கொடுப்பவர் அருண் விஜய். இந்தப் படத்திலும் அதே கம்பீரம், மிடுக்கு. மனைவியை அநியாயமாகப் பறி கொடுத்து அதனால் உச்சபட்ச கோபத்தில் இருப்பவர். யாருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு சோகம் நடக்கக் கூடாது. அதுவும் மனைவியின் வழக்கை தானே விசாரிக்கும் ஒரு நிலை. கோபம், சோகம் என உணர்வுகளால் கூடிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் இயல்பாய் நடித்திருக்கிறார்.

பாலக் லால்வானிக்கு அதிக வேலையில்லை. சில காட்சிகளில் வந்தாலும் காதல் மனைவிக்குரிய காதலை வெளிப்படுத்தி அநியாயமாய் இறந்து போகிறார்.

போலீஸ் துறைக்குள் உள்ள ஈகோ மோதலை வெளிப்படையாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர். அதிலும், சப் இன்ஸ்பெக்டர் அருண் விஜய் மீது இன்ஸ்பெக்டர் காட்டும் அந்த வெறுப்பு, நமக்கே கோபத்தை ஏற்படுத்துகிறது. 

பின்னணி இசை யார் எனக் கேட்க வைக்கிறார் இசையமைப்பாளர் ஷபிர். கோபிநாத்தின் ஒளிப்பதிவு இரவு நேரக் காட்சிகளில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்துகிறது. 

தேவையற்ற நீளம், சினிமாத்தனமான காட்சிகள் இல்லாமல் ஒரு இயல்பான போலீஸ் படத்தைப் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.