கார்த்திக் மதுசூதன், சாம் ஆர்டி.எக்ஸ் இயக்கத்தில், பாலசாரங்கன் இசையமைப்பில், கார்த்திக் மதுசூதன், ஷ்ரிதா சிவதாஸ் மற்றும் பலர் நடித்துள்ள படம் இது.

33 வயது ஆணுக்கும், 21 வயது பெண்ணுக்கும் இடையில் நடக்கும் ஒரு காதல் கதை. பல பெண்களுடன் சுற்றுபவர் எனத் தெரிந்தும் கார்த்திக் மதுசூதன் உடன் பழக ஆரம்பிக்கிறார் ஏற்கெனவே வேறொருவருடன் காதலில் இருக்கும் ஷ்ரிதா சிவதாஸ். ஒரு கட்டத்தில் அதுவே காதலாக மாறுகிறது. தனது காதலை கார்த்திக்கிடம் சொல்கிறார். ஆனால், வயது வித்தியாசத்தை முக்கிய காரணமாகச் சொல்லியும், காதலில் நம்பிக்கை இல்லை என்றும் மறுக்கிறார் கார்த்திக். இருப்பினும் தனது பழைய காதலை துறந்து கார்த்திக்கை கைபிடிக்க முயல்கிறார் ஷ்ரிதா. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.

இந்தக் காலத்து காதல் இப்படித்தான் இருக்குமோ என அதிர்ச்சியைக் கொடுக்கும். பல பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் கதாநாயகன். எப்போதும், குடி, புகை எனச் சுற்றுபவர். அவர் மீது அதீத காதல் கொள்ளும் கதாநாயகி. இவருக்கோ ஏற்கெனவே ஒருவருடன் காதல். ஆனால், அந்தக் காதலனை விட புதிய காதலன் மீது காதலோ காதல். இப்படிப் போகும் கதையில் கிளைமாக்சில் பெரிய திருப்புமுனையை வைத்திருக்கிறார்கள் இயக்குனர்கள். 

அவர்களுக்கோ, அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ வாழ்க்கையில் இப்படி நடந்திருக்குமோ ?. தீவிரமாகப் பார்த்தால் பெண்களைக் குற்றம் சொல்லும் ஒரு படமாக இந்தப் படம் இருக்கிறது.

கார்த்திக் மதுசூதன் எப்போதும் பீடி பிடித்துக் கொண்டும், அடிக்கடி குடித்துக் கொண்டும் இருக்கிறார். எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு ‘டோன்ட் கேர்’ கதாபாத்திரம். அவருடைய குரலும், உடல் மொழியும் அந்தக் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தி விடுகிறது. காதலை வெறுக்கும் ஒருவரை இந்தக் காலத்தில் பார்ப்பது அரிதோ அரிது. அப்படிப்பட்ட வெறுப்பை படம் முழுவதும் இயல்பாய் காட்டியிருக்கிறார். தொடர்ந்து முயற்சித்தால் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கலாம். 

சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷ்ரிதா சிவதாஸ். நாயகன் கார்த்திக்கை உருகி உருகி காதலிக்கும் கதாபாத்திரம். காதல் உணர்வுகளை அப்படியே முகத்தில் தேக்கி வைத்திருக்கிறார்.

பாலசாரங்கன் பின்னணி இசை குறிப்பிட வேண்டிய ஒன்று. படம் முழுவதும் பெங்களூருவிலேயே நடக்கிறது. ஆனால், வீடுகளுக்குள்ளேயே படத்தை நகர்த்தி இருக்கிறார்கள். மேக்கிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

காதலிப்பவர்களுக்கும், ஏன், காதலை வெறுப்பவர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும்.