தமிழ் சினிமாவில் வந்துள்ள ‘ஏலியன்’ வகைத் திரைப்படம். ஆனால், ‘ஏலியன்’ என்று சொல்லாமல் ‘வினோத விலங்கு’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலப் பகுதியில் உள்ள மலைப் பிரதேசத்தில் ‘செக்டார் 42’ என்ற இடத்தை மக்களின் நடமாட்டத்திற்குத் திறந்து விட அரசு முடிவு செய்கிறது. அது மக்கள் நடமாட்டத்திற்கு சரியானதென்று ராணுவத்திடம் ‘என்ஓசி’ கேட்கப்படுகிறது. அது பற்றி ஆராய ராணுவக் குழு செல்கிறது. ஆனால், அவர்கள் மர்மமாக இறந்து போகிறார்கள். அதனால், ஆர்யா தலைமையிலான ஒரு அதிரடி ராணுவக் குழுவை மீண்டும் அனுப்புகிறார்கள். அவர்கள் அந்த மர்மத்தைக் கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘வினோத விலங்கு’ என்பது வேண்டுமானால் தமிழ் சினிமாவுக்குப் புதிதாக இருக்கலாம். அதையே தீவிரவாதி, கடத்தல்காரன், ஏதோ ஒரு வில்லன் என்று சொன்னால் பழைய சினிமாவாகவே தெரியும். கடைசியில் சுற்றுச் சூழல் பற்றி ஒரு பார்வையைப் பதிவிட்டதற்காக இயக்குனரைப் பாராட்டலாம். மற்றபடி அதிக விறுவிறுப்பில்லாத ஒரு திரைக்கதை படத்திற்கு மைனஸ்.

ராணுவ கேப்டனாக ஆர்யா மிடுக்காக நடந்து கொள்கிறார். தங்கள் குழுவைச் சேர்ந்த ஹரிஷ் உத்தமன் நாட்டுக்காக துரோகம் செய்யவில்லை என்பதை உணர்த்தவே மீண்டும் செக்டார் 42 செல்கிறார். அவர் அங்கு செய்யும் அதிரடி ஹீரோயிசம் கதைக்குப் பொருத்தமாகவே உள்ளது.

ஆர்யா குழுவில் ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல், பரத் ராஜ் ஆகியோர் இருக்கிறார்கள். அனைவருமே ராணுவ வீரர்களுக்குரிய பொருத்தமான தோற்றத்தில் இருப்பது சிறப்பு. கார்ப்பரேட் கம்பெனிக்கு மறைமுகமாக உதவி செய்யும் மருத்துவ ஆராய்ச்சியாளராக சிம்ரன்.  படத்தின் நாயகி என பெயருக்கு ஐஸ்வர்ய லட்சுமி.

விஎப்எக்ஸ் உருவாக்கத்தில் வினோத விலங்கு தோற்றம் பயமுறுத்தும்படி உள்ளது. பிரம்மாண்டமாக படத்தை எடுக்க நினைத்து ஒரு சிறிய மலைப் பகுதியிலேயே படத்தை முடித்திருக்கிறார்கள்.

சக்தி சௌந்தர்ராஜன் இதற்கு முன்பு இயக்கிய ‘டிக் டிக் டிக், மிருதன்’ படங்களில் அடுத்து என்ன என்ற பரபரப்பு இருக்கும், அது இதில் மிஸ்ஸிங்.