பா ரஞ்சித் இயக்கத்தில், தென்மா இசையமைப்பில், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம்.

ஒரே படத்தில் இத்தனை விதமான காதலை சொல்ல முடியுமா என ஆச்சரியப்படும் விதத்தில் விதவிதமான காதலையும், காதலர்களையும் படத்தில் கதாபாத்திரங்களாக வடிவமைத்து, அதற்கேற்ற நடிகர்கள், நடிகைகளை தேர்வு செய்து சிறப்பாக நடிக்க வைத்துள்ளார் ரஞ்சித்.

காளிதாஸ், துஷாரா விஜயன் இருவரும் காதலர்கள். ஒரு ‘ஈகோ’ மோதலில் இருவரும் பிரிகிறார்கள். அதற்குப் பிறகு பாண்டிச்சேரியில் நடக்கும் நாடகக் குழுவின் புதிய நாடகத்தின் பயிற்சிக்காகச் செல்கிறார்கள். அங்கு பிரிந்தவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள நேரிடுகிறது. அதே குழுவிற்கு புதிதாக வந்துள்ள கலையரசனுக்கு துஷாராவுடன் முதலில் மோதல் ஏற்பட்டு பின் அது காதலாக மாறுகிறது. இந்தக் காதல் கதை ஒரு புறமிருக்க, பயிற்சிக்காக வந்த மற்றவர்களின் காதல் கதையும் இன்னொரு புறம் நகர்கிறது. எந்தக் காதல் எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரே ஒரு நாடக அரங்கிற்குள் பெரும்பாலான காட்சிகள் ஒரு கலைப்படத்திற்குரிய தன்மையுடன் மெதுவாக நகர்கிறது. சுவாரசியத்திற்காக ஒரு சில கதாபாத்திரங்கள் வெளிப்படையாகப் பேசும் வசனங்களையும், கடந்த சில வருடங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ‘நாடகக் காதல்’ விவரங்களையும் தனது அரசியல் கருத்துடன் வெளிப்படையாகப் போட்டு உடைக்கிறார் ரஞ்சித்.

காளிதாஸ், துஷாரா, கலையரசன் ஆகிய மூவருக்கும் மற்றவர்களை விடவும் கூடுதலான காட்சிகள், முக்கியத்துவம். மூவரின் நடிப்பும் அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருப்பதில் பாராட்டைப் பெறுகிறது. மற்ற கதாபாத்திரங்களில் சிலர் ரஞ்சித்தின் முந்தைய படங்களில் இடம் பெற்றவர்களாகவும், சிலர் அறிமுக நடிகர்களாகவும் இருக்கிறார்கள். அனைவருமே பொருத்தமான தேர்வுதான்.

தென்மா இசை கதையின் தன்மைக்கு வெளியில் செல்லாமல் அதனூடாக பாடல்களாகவும், பின்னணி இசையாகவும் பயணிக்கிறது.

படத்தில் சாதியப் பார்வைகளும், அதைச் சார்ந்த அரசியலும் அதிகம் பேசப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் படத்தில் உள்ள பல காதல்களை அந்த அரசியல் கருத்துக்கள் ஓவர் டேக் செய்கிறது. ஒரு காதல் ஜோடியின் பிரிவில் ஆரம்பித்து பல காதல் ஜோடிகளைப் பற்றிக் காட்டி, முடிவற்ற காதலாக முடிகிறது படம்.

இப்படிப்பட்ட படங்களை தமிழ் சினிமாவில் ‘கலைப் படங்கள்’ என முத்திரை குத்தி ரசிகர்களுக்கான சினிமாவாக இல்லாமல் விருதுகளுக்குரிய சினிமாவாக மாற்றிவிடுவார்கள்.