தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் இந்தப் படமும் ஒன்று. கொரானோ காலகட்டத்தால் விக்ரம் நடித்த படத்தை தியேட்டர்களில் பார்த்து மூன்று வருடங்களாகிவிட்டது. இந்தப் படத்தில் அவர் விதவிதமான தோற்றங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதும் படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. அந்த எதிர்பார்ப்புடன் படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி வரவேற்பும் அதிகமாகவே இருந்தது. 

நடிகராக விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போட்டுள்ளது இந்தப் படம். மீண்டும் ஒரு ‘அந்நியன், ஐ’ போன்ற ஹை கிளாஸ் கமர்ஷியல் படத்தைப் பார்த்த திருப்தி நிச்சயம் ஏற்படும். மேக்கிங்கில் ஒரு பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. 

வெளிநாட்டுப் படப்பிடிப்பு, இதுவரை வெளிவராத ரகசியமாக இருந்த விக்ரமின் இரு வேட நடிப்பு, ஏஆர் ரகுமான் பின்னணி இசை இந்தப் படத்திற்கான தரத்தை இன்னும் உயர்த்தியுள்ளது.

வெளிநாட்டில் சில கொலைகளை வெவ்வேறு தோற்றங்களில் செய்கிறார் விக்ரம். அந்தக் கொலைகளைச் செய்வது யார் என்பதை இன்டர்போல் அதிகாரியான இர்பான் பதான் கண்டுபிடிக்க இறங்குகிறார். அதே சமயம் கொலையாளி பற்றிய துப்பு ஒன்றை யாரோ ஒருவர் வெளிப்படையாகத் தெரிவிக்கிறார். கொலையாளியைத் தேடி சென்னை வருகிறார் இர்பான். தன்னைப் பற்றிய தகவலை யார் அளித்தார்கள் என்பது பற்றி விக்ரமும் தேட ஆரம்பிக்கிறார். இவர்களின் தேடலுக்கான விடை என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மதி, கதிர் என இரு வேடங்களில் விக்ரம். கணித ஆசிரியர் மதியழகன் தான் வெளிநாடுகளில் பணத்திற்காகக் கொலை செய்பவர். அந்த ரகசியம் அவரைச் சுற்றி உள்ளவர்களுக்கே தெரியாது. கதிர் என்ற ஹேக்கர் ஆக இரண்டாவது விக்ரம். இருவரது சந்திப்பிற்குப் பின்னான காட்சிகள் பரபரப்பாக அமைந்துள்ளன. இரண்டு வேடங்களிலும் விக்ரமின் நடிப்பு சிறப்பு. அதிலும், போலீஸ் விசாரிக்கும் ஒரு காட்சியில் அவரும், அவருடன் ஆனந்தராஜும் போட்டி போட்டு ஒன்றாகப் பேசி நடிக்கும் காட்சி மிரட்டல். ‘ஹாலுசினேஷன்’, அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல நினைக்கும் மன நோயால் பாதிக்கப்பட்டவர் மதியழகன். அது சம்பந்தமான காட்சிகள் சாதாரண ரசிகர்களைக் கொஞ்சம் குழம்ப வைக்கும்.

விக்ரமைக் காதலிக்கும் பேராசிரியையாக ஸ்ரீநிதி ஷெட்டி. காதலிப்பது மட்டும்தான் வேலை என்றாலும் அழகாய் வந்து போகிறார். இன்டர்போல் அதிகாரி இர்பான் பதானுக்கு உதவும் ஆராய்ச்சி மாணவியாக மீனாட்சி கோவிந்தராஜன். விக்ரமின் முன்னாள் காதலியாக மிருணாளினி ரவி. விக்ரமிற்கு கொலைகளை செய்வதற்காக ஏஜன்ட்டாக செயல்படும் பத்திரிகையாளராக கேஎஸ் ரவிக்குமார், கார்ப்பரேட் அதிபராக ரோஷன் மாத்யூ, விக்ரமின் அம்மாவாக மியா ஜார்ஜ், விக்ரமின் நண்பராக ரோபோ சங்கர் என படத்தில் பல கதாபாத்திரங்கள் உண்டு.

புவன் ஸ்ரீனிவாசன், ஹரிஷ் கண்ணன் இருவரின் ஒளிப்பதிவும் ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் உணர்வைக் கொடுத்திருக்கிறது. ஏஆர் ரகுமான் பின்னணி இசை மிரட்டல், பாடல்கள் படத்திற்குத் தேவையில்லை என்றே கூட சொல்லலாம். 

ஒரே படத்தில் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அது கொஞ்சம் குழப்பி அடிக்கிறதுதிரைக்கதையில் இரண்டு விக்ரமின் ஆள் மாறாட்டம் நடந்த பிறகு கதையைப் புரிந்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். படத்தின் நீளம்தான் கொஞ்சம் மைனஸ். அதைச் சரி செய்யப் போவதாகத் தகவல்.

விக்ரமின் நடிப்பிற்கும், வித்தியாசமான ஆக்ஷன் படமாக இருப்பதற்கும் ரசிக்கலாம்.