டைரி - விமர்சனம்

27 Aug 2022

பைவ் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், ரான் ஈத்தன் யோஹான் இசையமைப்பில், அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ள படம் இது.

‘டி பிளாக், தேஜாவு’ படங்களுக்குப் பிறகு இந்த வருடத்தில் அருள்நிதி நடித்து வெளிவந்துள்ள மூன்றாவது த்ரில்லர் படம் இது. இந்தப் படத்தை ஹாரர் படம் என்றும் சேர்த்துக் கொள்ளலாம். குற்ற விசாரணை, மர்மம், திகில் என தமிழில் சேர்த்து சொல்லலாம். இயக்குனர் இன்னாசி பாண்டியன் இடைவேளை வரையிலான காட்சிகளில் அருள்நிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிட்டார். அதை மட்டும் சரி செய்திருந்தால் இந்தப் படம் பிரமாதமான ஒரு படமாக அமைந்திருக்கும். இடைவேளைக்குப் பின்னர்தான் அருள்நிதிக்கு திரைக்கதையில் இடம் கொடுத்திருக்கிறார். முதல் பாதியைப் பொறுமையுடன் கடந்துவிட்டால், ‘டைரி’யைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பயிற்சியில் பல வருடங்களாக முடிக்க முடியாத ஒரு வழக்கை எடுத்துக் கொண்டு விசாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அருள்நிதி ஊட்டியில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு ஒன்றை எடுத்து, அதை விசாரிக்க ஊட்டி செல்கிறார். அப்போது நள்ளிரவில் ஊட்டியிலிருந்து கோயம்புத்தூர் சென்று கொண்டிருக்கும் ஒரு பேருந்தில் செல்ல நேரிடுகிறது. அங்குதான் அந்த வழக்கின் திருப்புமுனை நடக்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அருள் நிதி அவருக்கான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தனி கவனத்துடன் தேர்வு செய்பவர். இந்தப் படத்திலும் அப்படியே தேர்வு செய்திருக்கிறார். சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி பெறும் போதே ஒரு தேர்ந்த விசாரணை அதிகாரி போல வழக்கு விசாரணையில் ஈடுபடுகிறார். இதற்கு முன்பு சில படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் இந்தப் படத்திலும் அவருக்குக் கை கொடுத்திருக்கிறது.

படத்தின் கதாநாயகியாக புதுமுகம் பவித்ரா மாரிமுத்து. பார்ப்பதற்கு ‘விக்ரம் வேதா’ கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் தங்கை போல இருக்கிறார். ஊட்டி காவல் நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே போலீஸ் கதாபாத்திரத்தில் பொருத்தமாய் நடித்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் நிறைய புதுமுகங்கள். தெரிந்த முகங்களாக சாம்ஸ், ஷாரா, ஜெயப்பிரகாஷ் என ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்னணிக் கதையைச் சொல்லி மையக் கதையிலிருந்து அவ்வப்போது தடம் மாறுகிறார் இயக்குனர். இதுதான் படத்தின் வேகத்தையும், பரபரப்பையும் குறைத்துவிடுகிறது.

ரான் ஈத்தன் யோஹானின் பின்னணி இசை ஒரு த்ரில்லர் படத்திற்குரிய அழுத்தத்தை அதிகமாகவே கொடுக்கிறது. அரவிந்த் சிங் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம். ஊட்டி மலையின் இரவுக் காட்சிகளில் சிறப்பான லைட்டிங்கை அமைத்திருக்கிறார்.

கொஞ்சம் பொறுமையுடன் பார்த்தால் ஒரு சுவாரசியமான த்ரில்லர் படத்தை ரசிக்கலாம்.

Tags: diary, innasi pandian, arulnithi, pavithra marimuthu, Ron Ethan Yohann

Share via: