தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படமாக கடந்த வருடம் மே மாதம் இணையதளத்தில் வெளிவந்த படம் ‘மேதகு’.

அப்படத்தின் இரண்டாம் பாகமும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 

முதல் பாகத்திலிருந்து சில காட்சிகளை முதலில் காட்டிவிட்டு, பின்னர் இரண்டாம் பாகத்தின் கதையை ஆரம்பிக்கிறார்கள். தமிழ்நாட்டில் கல்லூரி விழா ஒன்றில் பிரபகாரன் பற்றிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக விடுதலைப் புலிகளின் போராட்டம் பற்றி முள்ளி வாய்க்கால் முற்றத்தில் உள்ள நாசரிடம் வந்து விவரங்களைக் கேட்பதாகப் படம் நகர்கிறது.

முதல் பாகத்தில் தமிழர்களின் துயரங்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிய படமாக இருந்தது. இரண்டாம் பாகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவான விதம், அவற்றில் வீரர்களைச் சேர்த்தது, தமிழகத்தில் பயிற்சி எடுத்தது, இங்குள்ள சில அரசியல் நிகழ்வுகள் என கதை நகர்கிறது.

பிரபாகரன் கதாபாத்திரத்தில் கௌரி சங்கர் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் ஒரு யதார்த்தம் தெரிகிறது. அனுபவசாலி நடிகர் போல அழுத்தமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழக அரசியலில் எம்ஜிஆர் தான் விடுதலைப் புலிகளுக்கு அதிகமாக உதவி செய்தார் என படம் சொல்கிறது. சில பல சர்ச்சைக் காட்சிகளும் படத்தில் உள்ளன. 

ஒரு டாகுமென்டரி போல வேண்டுமானால் படத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு முழுமையான திரைப்படத்திற்கான உருவாக்கம் படத்தில் இல்லாதது ஆகப் பெரும் குறை. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு போராட்டத்தை இப்படியான ஒரு படமாகப் பதிவு செய்ய வேண்டுமா என்பது கேள்வி.

மேதகு 2 பத்திரிகைக் குறிப்பு

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

கதாநாயகனாக தமிழீழ தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர்  நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார்.

இரா.கோ யோகேந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை மற்றும் வரலாற்று ஆய்வில் மேதகு திரைக்கள குழுவினருடன் சுபன் முன்னின்று உதவி புரிந்துள்ளார்.

இசையமைப்பாளர் பிரவின் குமார், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், சண்டை பயிற்சி ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம்,  பாடகர்கள் சைந்தவி,  புதுவை சித்தன் ஜெயமூர்த்தி என இந்தப்படத்தின் தொழில்நுட்ப குழுவும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தப்படத்திற்காக வழங்கியுள்ளனர்.

ஆகஸ்ட்-19ஆம் தேதி ஐரோப்பா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியானது இப்படம். தே  ஆகியவற்றில் முன்பதிவு துவங்கியுள்ளது.

தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாகி உள்ளது. படத்தைத் திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தை பார்க்க முடியும்.