க்ரைம் த்ரில்லர் வகையிலான இணையத் தொடர்கள் தான் ரசிகர்களை அதிகம் கவர்கிறது. அவற்றிலும் சொல்லாத புதிய கதைகளைச் சொன்னால் ரசிகர்களை அதிகம் ஈர்க்க முடிகிறது. அந்த விதத்தில் இந்தத் தொடரின் கதை புதிய கதை. ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயமான ஒரு பெயரைத் தலைப்பாக வைத்து கற்பனை கலந்த ஒரு த்ரில்லர் கதையைக் கொடுத்திருக்கிறார்கள். ‘ஈரம், குற்றம் 23’ படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கம் என்பதால் இத்தொடர் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

தமிழ் ராக்கர்ஸ் என்பது புதிய திரைப்படங்களை உடனடியாக பைரசியாக இணையதளங்களில் பதிவேற்றும் ஒரு இணையதளம். இந்தத் தளத்தை இயக்குபவர்கள் யார், இதன் பின்னணி என்ன என கடந்த சில வருடங்களாக தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பலரும் முயற்சித்துவிட்டார்கள். மாநில அரசும், மத்திய அரசும் இப்படிப்பட்ட பைரசி தளங்களை முழுமையாக முடக்க வேண்டும் என்பதுதான் திரையுலகினரின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது. 

அப்படிப்பட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் எப்படி செயல்படுகிறது, அதற்கு எங்கிருந்து படங்களின் காப்பி போகிறது என்பதை பல பரபரப்பான சம்பவங்களுடன் எழுதி இத்தொடரைக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு முழுமையான இணையத் தொடராக அந்த தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடிப்பதிலேயே திரைக்கதை நகர்ந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், ஒரு மசாலா தமிழ் சினிமா படத்திற்குரிய காட்சிகள் சிலவற்றை வைத்ததால் ஒரு இணையத் தொடருக்குரிய தாக்கத்தை முழுமையாகத் தரவில்லை. சில காட்சிகள் சினிமா போலவும், சில காட்சிகள் தொடர் போலவும் உள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் குழுவைக் கண்டுபிடிக்கும் சிறப்பு அதிகாரியாக அருண் விஜய், அவருடைய குழுவில் சைபர் கிரைம் அதிகாரியாக வாணி போஜன், சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டராக வினோதினி வைத்யநாதன், இன்ஸ்பெக்டர் வினோத் சாகர் என இந்த நால்வர் குழுதான் களத்தில் இறங்குகிறது. தொடர் முழுவதும் இவர்கள் அதிரடிதான். நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் போலீஸ் குழுவின் விசாரணை என்றால், மற்றொரு பக்கம் 300 கோடி ரூபாய் செலவில் தயாராகி வெளியாக உள்ள ‘கருடா’ என்ற படத்தை தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பாகவே வெளியிடப் போகிறோம் என தமிழ் ராக்கர்ஸ் அறிவிக்கிறது. அப்படத்தின் தயாரிப்பாளர், அப்படத்தின் நாயகன், நாயகனின் அப்பா என கூடவே இன்னொரு கதையும் உண்டு. இது இன்றைய தமிழ் சினிமா நிகழ்வுகள் பலவற்றை வெளிப்படையாகக் கிண்டலடிக்கிறது. தயாரிப்பாளராக அழகம் பெருமாள், நாயகனின் அப்பாவாக குமார் நடராஜன் பொருத்தமாக நடித்துள்ளனர். அருண் விஜய்யின் மனைவியாக ஐஸ்வர்யா மேனன். ஆரம்ப அத்தியாயங்கள் இவர்களைச் சுற்றி நகர்கிறது

மற்ற கதாபாத்திரங்களில் காக்கா முட்டை ரமேஷ், விக்னேஷ், தமிழ் ராக்கர்ஸ் குழுத் தலைவரான தருண் குமார், இவரது குழுவில் இடம் பெற்றுள்ள சிலர் என அனைவருமே நன்றாக நடித்துள்ளார்கள்.

மொத்தம் உள்ள 8 அத்தியாயங்களில் சில இடங்களில் தொய்விருந்தாலும் இதுவரை நாம் பார்க்காத கதை, எப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள் என்ற ஆவலில் பார்க்கலாம்.