ஜீவி 2 - விமர்சனம்
21 Aug 2022
விஜே கோபிநாத் இயக்கத்தில், கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைப்பில், வெற்றி, அஷ்வினி, கருணாகரன் மற்றும் பலர் நடித்து ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள படம்.
2019ம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் வரவேற்பையும் பெற்ற ‘ஜீவி’ படத்தின் இரண்டாம் பாகம்தான் இந்த ‘ஜீவி 2’. முதல் பாகத்தில் விட்ட கதையிலிருந்து அதே முக்கிய கதாபாத்திரங்களுடன் தொடர்ந்திருக்கிறார்கள்.
தனது வீட்டு ஓனரான ரோகிணியின் மகள் அஷ்வினியைத் திருமணம் செய்து கொள்கிறார் வெற்றி. அதனால் முதல் பாகத்தில் வந்த தொடர்பியல் இதில் அறுந்துவிடும் என நினைக்கிறார். ஆனாலும், அந்தத் தொடர்பியல் இப்போதும் தொடர்கிறது. பிரிந்த நண்பன் கருணாகரன் மீண்டும் வருகிறார். புதிதாக முபாஷிர் நண்பனாக வந்து சேர்கிறார். முபாஷிர் வீட்டில் வெற்றியும், கருணாகரனும் கொள்ளை அடிக்க திட்டமிட்டு அதைச் செய்கின்றனர். ஆனால், முபாஷிர் வேறு யாராலோ கொல்லப்படுகிறார். இருந்தாலும் போலீசின் சந்தேகப் பார்வை வெற்றி, கருணாகரன் மீது விழுகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்பியல், விதி, திருப்பமான சம்பவங்கள் என பரபரப்பைக் கூட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனாலும், முதல் பாகம் அளவிற்கு இந்த இரண்டாம் பாகம் இல்லை என்பது சற்றே குறைதான். முதல் பாகத்தைப் பார்த்தால் மட்டுமே இந்த இரண்டாம் பாகத்தைப் புரிந்து கொள்ள முடியும். முதல் பாகத்தின் முக்கியக் கதையைச் சுருக்கமாகச் சொல்லித்தான் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர்.
முதல் பாகத்தில் இடம் பெற்ற முக்கிய கதாபாத்திரங்களான வெற்றி, கருணாகரன், அஷ்வினி, ரோகிணி, மைம் கோபி ஆகியோர் அதே அழுத்தமான நடிப்பை இந்த இரண்டாம் பாகத்திலும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட நண்பன் கதாபாத்திரத்தில் முபாஷிர், போலீஸ் கதாபாத்திரத்தில் ஜவஹர் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
வித்தியாசமான கதைகளைக் கொடுக்க வேண்டும் என கோபிநாத் போன்ற இயக்குனர்கள் முயற்சிப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. இந்த இரண்டாம் பாகத்தில் சில சிறிய குறைகள் இருந்தாலும் படத்தை ரசிக்க முடியும்.
Tags: jiivi 2, vetri, vj gopinath, ashwini, karunakaran