திருச்சிற்றம்பலம் - விமர்சனம்
19 Aug 2022
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’.
அடடா, இவ்வளவு அருமையான ஒரு காதல் கதையைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது என்று சொல்ல வைத்துள்ள படம்.
உணவு டெலிவரி செய்யும் வேலை பார்க்கும் இளைஞர்ன தனுஷ். இன்ஸ்பெக்டர் அப்பா பிரகாஷ்ராஜ், வீட்டில் இருக்கும் தாத்தா ஆகியோருடன் இருக்கிறார். ஒரு விபத்தில் தன் அம்மா, தங்கை ஆகியோர் மரணம் அடைய அப்பா பிரகாஷ்ராஜ் தான் காரணம் என அவருடன் பத்து வருடங்களாகப் பேசாமல் இருக்கிறார். தனுஷுக்கு எல்லாமே அவருடைய நெருங்கிய தோழி நித்யா மேனன்தான். நித்யாவிடம் சொல்லிவிட்டே பள்ளித் தோழியான ராஷி கண்ணாவிடம் காதலைச் சொல்லி ஏமாற்றமடைந்து திரும்புகிறார். அது போல கிராமத்துக்குச் சென்ற போது அங்கு பிரியா பவானி சங்கரிடமும் ஏமாந்து திரும்புகிறார். தாத்தா பாரதிராஜா, உனக்கு பொருத்தமான ஜோடி நித்யா மேனன்தான் எனச் சொல்ல அதிர்ச்சியடைகிறார் தனுஷ். அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படம் முழுவதும் தனுஷ், நித்யா மேனன் சாம்ராஜ்ஜியம்தான். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். இப்படி ஒரு நட்பு நமக்கும் இருக்காதா என படம் பார்க்கும் இளைஞர்களையும், இளைஞிகளையும் நிச்சயம் ஏங்க வைக்கும். தனுஷை இப்படிப் பார்க்கத்தான் அவருடைய ரசிகர்களுக்கும், ஏனைய ரசிகர்களுக்கும் ஆசையாக இருக்கிறது என்பது படத்திற்குக் கிடைத்த வரவேற்பிலிருந்தே தெரிகிறது.
நித்யா மேனன் தமிழ் சினிமாவில் அடிக்கடி நடிக்க வேண்டும் என்ற ஆசை இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பலருக்கும் வரும். கதாபாத்திரத்தை உள்வாங்கி என்னமாய் நடித்திருக்கிறார். அவரைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்தக் கதாபாத்திரத்தில் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.
பிரகாஷ்ராஜ் அவ்வப்போது குணச்சித்திர நடிப்பிலும் கலக்குவார் என்பதற்கு இந்தப் படம் மேலும் ஒரு உதாரணம். தாத்தா பாரதிராஜா மற்றுமொரு யதார்த்த நடிப்பு. ஒரே வீட்டிற்குள் தனுஷ், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஏட்டிக்குப் போட்டி சண்டை, சச்சரவு கோபமாக இருந்தாலும் அதைப் பார்த்து ரசிப்பதிலும் ரசிகர்களுக்கு ஒரு சுவாரசியம் வைத்திருக்கிறார்கள்.
கொஞ்ச நேரமே வந்தாலும் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் இரு வேறுபட்ட பெண்களை கண்முன் காட்டிச் செல்கிறார்கள். சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கூட அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் ஸ்கோர் செய்கிறார்கள்.
அனிருத், தனுஷ் கூட்டணி ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது. பின்னணி இசை மட்டும் ஏற்கெனவே கேட்ட ஞாபகம். ஒரு காலனிக்குள் அழகான லைட்டிங்குகளை வைத்து ஒளிப்பதிவில் அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.
தாத்தா, பேரன் ஒன்றாக பீர் குடிப்பது, அப்பா பிரகாஷ்ராஜை தனுஷ் அவன், இவன் எனப் பேசுவது ஆகியவற்றைத் தவிர்த்திருக்கலாம். இந்தக் கால இளைஞர்களை அதைப் பிடித்துக் கொள்வார்கள். அது மட்டும்தான் கொஞ்குறையாகத் தெரிகிறது. மற்றபடி நிறைவான ஒரு படம்.
Tags: thiruchitrambalam, dhanush, anirudh, nithya menon, rashi khanna, priya bhavani shankar, prakash raj, bharathiraja