எமோஜி – விமர்சனம்

13 Aug 2022

தமிழ் ஓடிடி உலகில் மாதத்திற்கு ஒரு சில தொடர்களாவது தற்போது வெளியாகி விடுகின்றன. ஒரு வெப் தொடர் என்றால் பொதுவாக 5 முதல் 8 அத்தியாயங்கள் வரை வைக்கிறார்கள். ஒவ்வொரு தொடரின் முடிவிலும் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் முடிப்பார்கள். ஒரு அத்தியாயத்தைக் கூட விடாமல் முழுமையாகப் பார்க்க வைக்கும் தொடர்கள் ஒரு சில தொடர்கள்தான். அந்த விதத்தில் வந்துள்ள தொடர்தான் இந்த ‘எமோஜி’.

த்ரில்லர் வகைத் தொடர்கள்தான் ஓடிடி தளங்களில் அதிகம் வெளியாகின்றன. இந்த ‘எமோஜி’ ஒரு காதல் தொடர். இன்றைய இளைர்கள் ரசிக்கும் விதமான இந்தக் காலத்து ‘பிரேக் அப்’ காதலைத்தான் தொடரில் சொல்லியிருக்கிறார்கள்.

மகத், தேவிகா இருவரும் விவாகரத்திற்காக கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்கள் என்பதிலிருந்து தொடரின் கதை ஆரம்பமாகிறது. மகத் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார். அவருக்கும் விளையாட்டுப் பொருட்களை விற்கும் கடையில் வேலை பார்க்கும் மானசா சௌத்ரிக்கும் காதல் வருகிறது. இருவரும் காதலிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு போய் விடுகிறார் மானசா. அதற்குப் பிறகு மகத்தின் எதிர் வீட்டில் இருக்கும் தேவிகா சதீஷ் மீது காதல் கொள்கிறார் மகத். தேவிகாவும் அதற்கு முன்பு அவருடைய காதலருடன் பிரேக் அப் ஆனவர். மகத்தும், தேவிகாவும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் ஏன் விவாகரத்து கேட்கின்றனர் என்பதுதான் தொடரின் கிளைமாக்ஸ்.

இந்தக் கால இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை மகத் அவரது நடிப்பின் மூலம் இயல்பாகவே காட்டியிருக்கிறார். ஆனால், பேசும் போது மட்டும் சிம்பு போலவே பேசுவது ஏன் என்று தெரியவில்லை. மானசாவைப் பார்த்ததும் அவர் மீது காதலில் விழுந்து அவரையே காதலிக்க ஆரம்பிக்கிறார். அவர் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதைத் தாங்க முடியாமல் தவிக்கிறார். பின்னர் அவரது வாழ்வில் தேவிகா ரூபத்தில் மீண்டும் ஒரு காதல் எட்டிப் பார்க்கிறது. முதல் காதலை விட இந்தக் காதலை சுவாரசியமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

தொடரின் இரண்டு கதாநாயகிகளான தேவிகா சதீஷ், மானசா சௌத்தி இருவருமே நெருக்கமான காதல் காட்சிகளில் எந்தத் தயக்கமும் அஇல்லாமல் நடித்திருக்கிறார்கள். முதல் சில அத்தியாயங்களில் மானசாவுக்குத்தான் முக்கியத்துவம். சினிமாத்தனமான தோற்றம் இல்லாமல் யதார்த்தமாய் இருக்கிறார். அடுத்த அத்தியாயங்களில் கதை தேவிகா சதீஷைச் சுற்றி நடிக்கிறது. ஒரு படத்தில் நாயகியாக நடிப்பதற்குரிய அத்தனை தகுதிகளும் தேவிகாவிற்கு இருக்கிறது. சீக்கிரமே இவரைத் திரையில் கதாநாயகியாகப் பார்க்கலாம். 

தொடரின் இயக்குனர் சென் ரங்கசாமி இந்தக் கால காதலை எந்தவித சமசரமும் இல்லாமல் கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் மட்டும் சில காட்சிகள் மிக மெதுவாக நகர்ந்து சோதனை செய்கிறது. அதற்குப் பிறகு இரண்டு கதாநாயகிகளும் தொடரை டேக் ஆப் செய்துவிடுகிறார்கள். மேக்கிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். போகப் போக தொடருக்குள் நம்மை இழுத்துவிடுகிறார் இயக்குனர்.


 

Tags: emoji, mahath, devika sathish, manasa chowdry

Share via: