முத்தையா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இயக்குனர் முத்தையா மீது சாதிய ரீதியிலான படங்களைக் கொடுப்பவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், இந்தப் படத்தில் அப்படி எதுவுமில்லாமல், ஒரு அப்பாவுக்கும், மகனுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை உணர்வு பூர்வமாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

அப்பா பிரகாஷ்  ராஜால்தான் அம்மா சரண்யா தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என அப்பா பிரகாஷ்ராஜ் மீது கொலை வெறியில் இருப்பவர் கார்த்தி. தன் அம்மா கடைசியாக வாழ்ந்த இடத்தில் அப்பாவையும், மூன்று அண்ணன்களையும் மன்னிப்பு கேட்க வைப்பேன் என சபதமெடுக்கிறார். அதை நிறைவேற்றினாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கிராமத்துக் கதாபாத்திரங்கள் என்றாலே கார்த்திக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. தனது முதல் படத்திலேயே அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் அசத்தியவர், இதில் அசத்தாமலா இருப்பார். விருமன் கதாபாத்திரத்தில் விளையாடியிருக்கிறார். ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, ரெமான்ஸ் என அளைத்திலும் செட்டாகிவிடுகிறார்.

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள படம். பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஷங்கர் தனது மகளை ஒரு கிராமத்துக் கதையில் நடிக்க வைத்தது ஆச்சரியம்தான். நடனம், நடிப்பு இரண்டிலும் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார் அதிதி. அடுத்தடுத்த படங்கள்தான் அவருடைய திறமைக்கு உண்மையான சான்றாக இருக்கப் போகிறது.

வில்லத்தனம், குணச்சித்திரம் இரண்டிலும் பிரகாஷ்ராஜை விட்டால் இன்றைக்கு வேறு யார் இருக்கிறார்கள். கார்த்தியின் கூடவே படம் முழுவதும் வருகிறார். பட்டாசு  போல பல இடங்களில் நகைச்சுவை வசனங்களைத் தூவியிருக்கிறார். பிரகாஷ்ராஜின் இரண்டாவது மருமகளாக நடித்திருக்கும் மைனாவும் வீட்டுக்குள்ளேயே இருந்து தெறிக்க விடுகிறார்.

குறைவான முக்கியத்துவமாக இருந்தாலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார் ராஜ்கிரண். சில காட்சிகளில் வந்தாலும் நிறைவாய் நடித்திருக்கும் சிலரில் சரண்யா, மனோஜ் பாரதி, இளவரசு, அருந்ததி ஆகியோர் இடம் பிடிக்கிறார்கள்.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ஒவ்வொரு பாடலுமே இனிமையாக அமைந்து ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை தனி கவனம் செலுத்தி, சென்டிமென்ட் காட்சிகளில் உருக வைக்கிறார்.

இரண்டாம் பாதியில் உள்ள சில காட்சிகளை சீக்கிரமே முடித்திருக்கலாம். ஒரு அப்பா எப்படி இருக்கக்கூடாது, ஒரு அம்மா எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லும் படம்...