அத்வைத் சந்தன் இயக்கத்தில், அமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங் மற்றும் பலர் நடிப்பில் ஹிந்தியில் உருவான ‘லால் சிங் சத்தா’ படம் அதே பெயரில் தமிழிலும் டப்பிங் ஆகி வெளிவந்துள்ளது.

ஹாலிவுட்டில் 1994ம் ஆண்டு டாம் ஹன்க்ஸ் நடித்து வெளிவந்த ‘பாரஸ்ட் கும்ப்’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இந்திய ரசிகர்களுக்காக படத்தில் சில பல மாற்றங்களைச் செய்துள்ளார்கள்.

சிறு வயது முதலே அம்மாவின் அரவணைப்பு, பாசத்தில் மட்டுமே வளர்ந்தவர் அமீர்கான். படத்தில் இவரது கதாபாத்திரம் மன வளர்ச்சி குன்றியவர் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கரீனா கபூர் மீது ஒரு காதல். ஆனால், அதை கரீனா ஏற்கவில்லை. சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் மும்பை சென்று விடுகிறார். ராணுவத்தில் சேர்ந்து தீவிரவாதிகளைக் கொன்று வீர் சக்கரா விருது பெறுகிறார் அமீர். அப்போது அவருடன் நண்பனாக இருந்த நாக சைதன்யா வீர மரணம் அடைகிறார். ராணுவத்தில் இருந்து வெளியில் வந்ததும் நண்பன் நாக சைதன்யாவின் ஆசைப்படி வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்கிறார். அதன்பின் நடப்பவை மீதிக் கதை.

அமீர்கான் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர். இந்தப் படத்தில் அவர் இதற்கு முன்பு நடித்த ‘பிகே’ படத்தின் தாக்கம் இருந்தாலும் லால் சிங் ஆகவே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். 

அமீர்கானுடன் சிறு வயதிலிருந்தே நட்பாகப் பழகுபவர் கரீனா கபூர். ஆனால், அவருக்கோ, மாடலிங் செய்து பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற முடியாமல் தன் வாழ்க்கையைத் தொலைக்கிறார். 

அமீர்கானுடன் ராணுவத்தில் இருக்கும் நண்பனாக நாக சைதன்யா. கொஞ்ச நேரமே வந்தாலும் தனது அப்பாவித்தனத்தால் மனதில் இடம் பிடிக்கிறார். 

ஒரு ரயில் பயணத்தில் அமீர்கான் தன்னுடைய ஒட்டு மொத்த வாழ்க்கைக் கதையை சொல்லும்படியாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

பிளாஷ் பேக்குகளில் பல அரசியல் நிகழ்வுகளை திரைக்கதையுடன் இணைத்திருக்கிறார்கள். சிலவற்றில் இயக்குனரின் பிரச்சார யுக்தி வெளிப்பட்டிருக்கிறது. அதுவே படத்தின் போக்கையும் கொஞ்சம் சிதைத்துவிடுகிறது. அதையெல்லாம் தவிர்த்துவிட்டு லால் சிங்கின் வாழ்க்கைப் பயணத்தை மட்டும் கொடுத்திருக்கலாம்.