ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் அந்த மொழி நடிகர்கள், நடிகைகள் நடிக்காமல் வேற்று மொழி நடிகர்கள், நடிகைகள் நடித்து வெளிவந்துள்ள படம் இது.

படத்தின் கதாநாயகன் துல்கர் சல்மான் மலையாளத் திரையுலகத்தையும், கதாநாயகி மிருணாள் தாக்கூர் ஹிந்தித் திரையுலகத்தையும், மற்றொரு கதாநாயகி ராஷ்மிகா மந்தனா கன்னடத் திரையுலகத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தத் தெலுங்குப் படம் தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் டப்பிங் ஆகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஹனு ராகவுப்படி ஒரு அற்புதமான, அழகான காதல் கதையைக் கொடுத்து மொழிகளைக் கடந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ராஷ்மிகா லண்டனில் படித்து வருகிறார். அவர் நாட்டின் மீது மட்டும் தீவிரப் பற்றும் இந்தியா மீது வெறுப்பையும் கொண்டவர். அவருடைய தாத்தாவின் கடைசி ஆசையாக ஒரு கடிதத்தை இந்தியாவில் உள்ள சீதா மகாலட்சுமி என்ற பெண்ணிடம் கொண்டு வந்து சேர்க்க இந்தியா வருகிறார். யார் அந்த சீதா மகாலட்சுமி, எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் தேடலை ஆரம்பிக்கிறார். அவர் கடிதத்தைக் கொண்டு போய் சேர்த்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சீதா மகாலட்சுமி யார் என்ற தேடலில் சீதா மகாலட்சுமிக்கும், ராமிற்கும் இடையிலான காதல் கதை ராஷ்மிகாவுக்குத் தெரிய வருகிறது. அந்தக் காதல்தான் இந்தப் படத்தின் மையக் கதை.

சீதா மகாலட்சுமியாக மிருணாள் தாக்கூர், ராம் ஆக துல்கர் சல்மான். மதங்களைக் கடந்த ஒரு காதல் கதை. சீதா மகாலட்சுமி என்ற பெயரில் ராணுவத்தில் லெப்டினென்ட் ஆக இருக்கும் ராமிற்கு காதல் கடிதம் எழுதுகிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளவரசி நூர்ஜகான். சீதா ஒரு முஸ்லிம் இளவரசி என்று தெரியாமலேயே காதலிக்கிறார் ராம். இவர்கள் காதலை அணு அணுவாய் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ராம் ஆக துல்கர் சல்மான். இவரை விட இந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. அழகான சீதாவைக் கண்டதும் அவரிடம் காணப்படும் அந்தத் துடிப்பு படம் முழுவதும் அவரிடம் நிறைந்திருக்கிறது.

சீதா மகாலட்சுமி என்ற பெயருக்கேற்றபடி மகாலட்சுமியாக இருக்கிறார் மிருணாள் தாக்கூர். அவரது காதல் பார்வையும், அவருடைய தோற்றமும் காதலில் விழாதவர்களையும் விழ வைக்கும். 

இந்தியா மீது வெறுப்புடன் இருக்கும் ராஷ்மிகா இந்தியாவிற்கு வந்து ராம், சீதா காதலைப் பற்றி தெரிந்து கொள்வதோடு மதங்களைக் கடந்த மனிதம் எப்படி இருக்கும் என்பதையும் உணர்ந்து கொள்கிறார்.

படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

கோபி சுந்தரின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பக்கபலம். வினோத், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு அழகோ அழகு.

படத்தின் நீளம் மட்டுமே படத்திற்கான மைனஸ்.