காட்டேரி - விமர்சனம்

08 Aug 2022

‘யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம்’ படங்களை இயக்கிய டீகே இயக்கியுள்ள படம்.

வைபவ், சோனம் பஜ்வா, ஆத்மிகா, கருணாகரன், ரவி மரியா, இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

பேய்ப் படங்களைப் பார்த்து ரசிகர்களுக்குப் போரடித்துவிட்டிருக்கும் என காட்டேரியைக் காட்டி பயமுறுத்தலாம் என டீகே நினைத்திருப்பார் போலிருக்கிறது. 

கதை ஒரு இடத்தில் ஆரம்பித்து எங்கெங்கோ சென்று, என்னென்னமோ சொல்லி எப்படியோ கொண்டு போய் முடிக்கிறது. மனதில் என்னவெல்லாம் தோன்றியதோ அதைக் காட்சிகளாக அமைத்து ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.

வைபவ் தலைமையிலான நண்பர்கள் கூட்டம் ஒரு தங்கப் புதையலைத் தேடி மலை கிராமம் ஒன்றிற்குச் செல்கிறது. அங்கு மர்மமான பல விஷயங்கள் நடக்கின்றன. ஊர் முழுவதும் பேய்கள்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்கள் அந்த தங்கப் புதையலைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபி ஆகியோர்தான் தங்கப் புதையலைத் தேடிச் செல்பவர்கள். அவர்களிடம் அந்தத் தகவலைத் தெரிவித்த ஆத்மிகாவும் செல்கிறார். கிராமத்திற்குச் சென்ற பிறகு பல பேய்களைச் சந்தித்து தப்பினாலும் பேயாகச் சுற்றி வரும் வரலட்சுமியிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். அதன்பிறகுதான் கதை கிளைமாக்சை நெருங்குகிறது.

படத்தை பெரும்பாலும் இலங்கை நுவரேலியா பகுதிகளில் படமாக்கியிருக்கிறார்கள். ஒரு கிராமமே திகிலாக இருக்கிறது என்பது மட்டும் வித்தியாசமாக உள்ளது. ரவி மரியா போன்றவர்கள் அடிக்கும் மொக்கை ஜோக்குகளைக் கடந்து படத்தை ரசிப்பதற்கு நிறைய பொறுமை வேண்டும்.

Tags: katteri, deekay, vaibhav, varalaxmi sarathkumar, aathmika, sonam bajwa

Share via: