பொய்க்கால் குதிரை - விமர்சனம்

05 Aug 2022

மாற்றுத் திறனாளி கதாபாத்திரங்களை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் மிகக் குறைவான படங்கள்தான் வரும்.

இந்தப் படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் பிரபுதேவாவை நடிக்க வைத்து முழு படத்தையும் கொடுத்திருக்கிறார்கள். 

சன்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலட்சுமி, பேபி ஆழியா மற்றும் பலர் நடித்துள்ள படம் இது.

ஒரு விபத்தில் மனைவி, தன் காலை இழந்த பிரபுதேவா மகள் பேபி ஆழியாவுடன் வசித்து வருகிறார். மகள் ஆழியாவுக்கு மருத்துவ ரீதியாக பிரச்சினை வருகிறது. அதற்காக பணம் தேவைப்படுகிறது. பணம் இல்லாத நிலையில் பெரும் பணக்காரரான வரலட்சுமியின் மகளைக் கடத்த நினைக்கிறார். அவர் கடத்துவதற்கு முன்பாகவே அந்தக் குழந்தையை யாரோ கடத்திவிடுகிறார்கள். ஆனால், பழி பிரபுதேவா மீது வந்து விழுகிறது. இருப்பினும் கடத்தப்பட்ட குழந்தையை தான் காப்பாற்றித் தருவதாகச் சொல்லி களத்தில் இறங்குகிறார். கடத்தப்பட்ட குழந்தையைக் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு கால் இல்லாத நிலையில் கால்கள் இருப்பவர்கள் அவ்வளவு எளிதில் நடிக்க முடியாது.  கிராபிக்ஸ் மூலம் பிரபுதேவாவை ஒரு கால் இல்லாதவராகக் காட்டினாலும், அதை நாம் நம்பும்படியாக அதற்கேற்ற உடல்மொழியை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார் பிரபுதேவா. ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த ஒரு கதாபாத்திரம். நடிப்பில் அவருடைய அனுபவம் பேசுகிறது.

பிசினஸ் உமனாக வரலட்சுமி, அவரது கணவராக ஜான் கொக்கேன், பிரபுதேவா மகளாக பேபி ஆழியா, நண்பனாக ஜெகன் ஆகியோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

ஒரு கால் இல்லாமல் பிரபுதேவாவை நடனமாட, சண்டையிட வைத்துள்ளதற்கு சம்பந்தப்பட்டவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். 

இடைவேளைக்குப் பின் எதிர்பாராத திருப்பங்களை வைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

Tags: poikkal kuthirai, prabhu deva, santhosh p jayakumar, varalakshmi, raiza wilson

Share via: