குற்றம் தவிர் - விமர்சனம்

27 Sep 2025

தமிழ் சினிமாவில் மருத்துவ மோசடிகளை மையமாகக் கொண்டு, உணர்ச்சி நிறைந்த ஆக்ஷன் கதையாக உருவாகியிருக்கும் 'குற்றம் தவிர்' படம், பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தைத் தருகிறது.

நாயகன் ரிஷி ரித்விக், தனது அக்கா வினோதினியின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து, காவல்துறை அதிகாரியாகும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், ஒரு கொடூரமான மருத்துவ ஊழல் காரணமாக அக்கா உயிரிழக்க, அதற்குப் பொறுப்பானவர்களை அழிக்கும் பழிவாங்கும் பயணத்தில் இறங்குகிறார் ரிஷி. இந்தப் போராட்டத்தில் அவர் வெற்றி பெறுகிறாரா? அக்காவின் ஆசை நிறைவேறுகிறதா? இல்லையா? என்பதே படத்தின் உள்ளடக்கம். இயக்குநர் எம். கஜேந்திரன், இந்தக் கதையை சஸ்பென்ஸ், காதல், காமெடி, திருப்பங்கள் நிறைந்த ஆக்ஷன் பேக்கேஜாகத் தொகுத்திருக்கிறார், ஆனால் சில இடங்களில் தேவையற்ற பில்டப் காட்சிகள் படத்தின் வேகத்தை சற்று குறைக்கின்றன.

நடிப்பு ரீதியாக, 'அட்டு' படத்தில் ரவுடி ரோலில் ஜொலித்த ரிஷி ரித்விக், இங்கே ஒரு லட்சியமுள்ள இளைஞனாகவும், பழிவாங்கும் ஹீரோவாகவும் மாறுபட்டு அசத்தியிருக்கிறார். அக்காவுக்காக உழைக்கும் உணர்ச்சிக் காட்சிகள், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள், காதல் மற்றும் டான்ஸ் சீக்வென்ஸ்கள் என எல்லாவற்றிலும் அவர் கலக்கல். அவரது ஆற்றல், படத்தின் மையப் பலமாக இருக்கிறது.

நாயகி ஆராத்யா, அழகும் திறமையும் இணைந்து பிரகாசிக்கிறார். நடனம், உணர்ச்சி வெளிப்பாடு என அனைத்திலும் சிறப்பாக நடித்து, படத்துக்கு கூடுதல் ஈர்ப்பைச் சேர்க்கிறார். அக்கா வேடத்தில் வினோதினி வைத்தியநாதன், தனது அனுபவமிக்க நடிப்பால் கதாபாத்திரத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறார் – அவரது காட்சிகள் உணர்ச்சி ரீதியாகத் தாக்கம் ஏற்படுத்துகின்றன.

வில்லன் சரவணன் கொடூரத்தனத்தை சிறப்பாகக் காட்டியிருக்கிறார், அவரது உதவியாளராகத் தயாரிப்பாளர் பாண்டுரங்கன், மருத்துவர் ஆனந்த் பாபு, சாய் தீனா, காமராஜ், செண்ட்ராயன் போன்றோர் – பலர் புதுமுகங்களாக இருந்தாலும், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகளாக அமைந்திருக்கின்றனர். அவர்களின் பங்களிப்பு படத்தின் யதார்த்தத்தை உயர்த்துகிறது.

இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் எல்லாமே எனர்ஜெடிக் – நடனம் போட வைக்கும் வகையில் இருக்கின்றன. பின்னணி இசை, ஆக்ஷன் காட்சிகளின் தீவிரத்தை பல மடங்கு அதிகரித்து, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரோவின் பாஸ்கர், கமர்ஷியல் ஸ்டைலில் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார் – பாடல் சீன்கள் வண்ணமயமாகவும், ஈர்க்கும் விதமாகவும் உருவாகியிருக்கின்றன.

மருத்துவ காப்பீட்டு ஊழல்களை அம்பலப்படுத்தும் வகையில் தயாரிப்பாளர் பி. பாண்டுரங்கன் எழுதிய கதை, சமூகப் பிரச்சினையை ஆக்ஷன் எண்டர்டெயினராக மாற்றியிருக்கிறது. இயக்குநர் கஜேந்திரன், அனைத்து அம்சங்களையும் சமநிலையில் கலந்து கொடுத்திருந்தாலும், சில தேவையில்லாத ஓவர்பில்டப்புகளைத் தவிர்த்திருந்தால், படம் இன்னும் பெரிய ஹிட்டாக மாறியிருக்கும். 

ஒட்டுமொத்தமாக, 'குற்றம் தவிர்' ஒரு ஃபாஸ்ட்-பேஸ்ட் ஃபேமிலி எண்டர்டெயினர் – தியேட்டரில் பார்க்கத் தகுந்தது.

Tags: kuttram thavir

Share via:

Movies Released On October 21