பல்டி - விமர்சனம்
27 Sep 2025
தமிழ் சினிமாவில் கபடி விளையாட்டை மையமாக வைத்து, ஆக்ஷன், உணர்ச்சி, மாஃபியா ட்விஸ்ட் என கலந்து கொடுக்கும் 'பல்டி' படம், இளைஞர்களின் லட்சியம் vs. பண ஆசை எனும் போராட்டத்தை விறுவிறுப்பாகச் சொல்கிறது.
கபடி ஸ்டார்கள் ஷேன் நிகம், சாந்தனு மற்றும் அவர்களது நண்பர்கள், விளையாட்டு மூலம் வாழ்க்கையை உயர்த்த நினைக்கின்றனர். ஆனால், கந்து வட்டி மாஃபியா தலைவன் செல்வராகவன், பணத்தை ஆசைக்காட்டி அவர்களை தனது இருண்ட உலகத்துக்கு இழுத்து விடுகிறார். இதனால் நண்பர்களின் வாழ்க்கை தடம் புரண்டு, சிக்கல்களின் சுழலில் சிக்க, அவர்கள் அதிலிருந்து மீண்டார்களா? இல்லையா? என்பதை ஆக்ரோஷமான ஆக்ஷன் ஸ்டைலில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் உன்னி சிவலிங்கம். படம் வேகமாக நகர்ந்தாலும், சில சண்டைக்காட்சிகளின் நீளம் சற்று சோர்வைத் தருகிறது, ஆனால் புதிய டெக்னிக்குகள் அதை ஈடுகட்டுகின்றன.
நடிப்பில் ஷேன் நிகம் தான் ஹைலைட் – கபடி வீரரின் உடல் மொழி, வேகம், உணர்ச்சி என அத்தனையும் அசால்ட்டாகக் கையாண்டு அசத்தியிருக்கிறார். போட்டிகளிலும், சண்டைகளிலும் அவரது எனர்ஜி திரையை அதிர வைக்கிறது. சூழலுக்கு ஏற்ப நடிப்பை மாற்றும் அவரது திறமை, படத்தின் மையப் பலமாக அமைகிறது.
சாந்தனு, ஷேனின் நண்பராகவும் இன்னொரு லீட் ரோலாகவும் ஜொலிக்கிறார். நல்லவனா? கெட்டவனா? எனக் குழப்பும் கேரக்டருக்கு, அழுத்தமான நடிப்பால் உயிர் கொடுத்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார் – அவரது ட்விஸ்ட் காட்சிகள் சூப்பர்!
வில்லன் செல்வராகவன், அன்பான பேச்சில் வில்லத்தனத்தை மறைத்து வெளிப்படுத்தும் ஸ்டைலில் படத்துக்கு கூடுதல் மசாலா சேர்க்கிறார். இயக்குநராக இருந்தாலும், நடிப்பில் அவர் கொடுக்கும் இம்பேக்ட் அபாரம். மற்றொரு வில்லன் அல்போன்ஸ் புத்திரன், திரை இருப்பால் கவனம் ஈர்த்தாலும், ரோல் சற்று சிறியது – இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நாயகி ப்ரீத்தி அஸ்ரானி, தனது பங்கை நேர்த்தியாகச் செய்து முடித்திருக்கிறார் – காதல் காட்சிகளில் அழகு சேர்க்கிறார்.
இசை அமைப்பாளர் சாய் அபயங்கரின் பாடல்கள் இனிமையானவை, பின்னணி இசை காட்சிகளுக்கு ஜோர் போடுகிறது. ஆக்ஷன் சீக்வென்ஸ்களில் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் பீஜியம்கள் கவனம் ஈர்க்கின்றன, ஆனால் சில இடங்களில் அனிருத் ஸ்டைலை நினைவூட்டுவது போல் உள்ளது.
ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ. புலிக்கல், காட்சிகளை மிரட்டலாகப் பிடித்திருக்கிறார் – கபடி மேட்ச்கள், சண்டைகள் என எல்லாம் பிரம்மாண்டமாகத் தெரிகின்றன. எத்தனை கேமராக்கள் பயன்படுத்தினாரோ தெரியவில்லை, ஆனால் விஷுவல் ட்ரீட்!
எடிட்டர் சிவகுமார் வி. பனிக்கரின் உழைப்பு திரையில் பளிச்சிடுகிறது – கூர்மையான கட்கள், உணர்ச்சிகளை நேர்த்தியாகக் கடத்துதல் என சிறப்பு. செல்வராகவன் மீது அடி விழும் சீன்கள் போன்றவை தனி கதை சொல்கின்றன. ஆனால், சண்டைக்காட்சிகளின் நீளம் சற்று இழுத்தடிப்பது போல் உள்ளது.
எழுத்து-இயக்கம் உன்னி சிவலிங்கம்: பல படங்களின் இன்ஸ்பிரேஷனுடன் உருவாக்கியிருந்தாலும், ஆரம்பம் முதல் எண்ட் வரை வேகம் குறையாமல் நகர்த்தியிருக்கிறார். கந்து வட்டி மாஃபியாக்களின் போட்டி, அப்பாவி இளைஞர்களின் சீரழிவு எனும் கரு, திரைக்கதையில் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. கபடி அணிகளுக்கு 'பஞ்சமி', 'பொற்றாமரை' எனப் பெயரிடல், 'உதயசூரியன்' மலையாளப் பாடல் மூலம் மறைமுக அரசியல் டச் – இவை படத்துக்கு வித்தியாசம் சேர்க்கின்றன. புதுமை இல்லை என்றாலும், கேரக்டர்கள், திரைக்கதை வேகம் என முழுமையான கமர்ஷியல் ஆக்ஷன் பேக்கேஜ்!
ஒட்டுமொத்தமாக, 'பல்டி' ஒரு ஃபாஸ்ட்-டிராக் எண்டர்டெயினர் – கபடி ஃபேன்ஸுக்கும், ஆக்ஷன் லவர்ஸுக்கும் பிடிக்கும்!
Tags: balti