இட்லி கடை - விமர்சனம்
01 Oct 2025
தனுஷ் இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் ‘இட்லி கடை’ அவரது இயக்கத்தில் வந்த முந்தைய படங்களான ‘பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியாகியிருக்கும் நான்காவது படைப்பு. இந்த படத்தை ஒரு உணர்வுபூர்வமான குடும்பப் படமாக, நமது மண், நமது குல தெய்வம், நமது மக்கள் என மண் சார்ந்த படைப்பாகக் கெொடுத்திருக்கிறார்.
இதில் தனுஷுடன் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு, ஜி.வி. பிரகாஷ் இசை, ஜாக்கி கலை இயக்கம், ஜி.கே. பிரசன்னாவின் படத்தொகுப்பு என தொழில்நுட்பக் குழு படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஆகாஷ் பாஸ்கரனும் தனுஷும் இணைந்து தயாரித்துள்ளனர்.
தேனி அருகேயுள்ள அழகிய கிராமத்தில் கதை தொடங்குகிறது. ராஜ்கிரண் நடத்தும் ‘சிவநேசன் இட்லி கடை’ அந்த ஊரின் அடையாளமாக விளங்குகிறது. பணத்தை விட, வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை முதன்மையாகக் கருதும் ராஜ்கிரண், இட்லி மாவை உரலில் அரைத்து, அன்போடு பரிமாறுவதை காதலாகக் கொண்டவர். அவரது மகனாக வரும் தனுஷ், இந்த இட்லி கடையையும் அப்பாவின் அன்பையும் ரசித்து வளர்கிறார். கேட்டரிங் படிப்பை முடித்து சென்னை வழியாக பாங்காக் செல்லும் தனுஷ், அங்கு கோடீஸ்வரரான சத்யராஜிடம் வேலை பார்க்கிறார். சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டே தனுஷை காதலிக்க, அவர்களது திருமணத்திற்கு பத்து நாட்கள் இருக்கையில், தனுஷின் தந்தை ராஜ்கிரண் மறைந்த செய்தி வருகிறது. கிராமத்திற்குத் திரும்பும் தனுஷ், தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, அடுத்த நாள் தாய் கீதா கைலாசமும் இறந்துவிட, தனிமையில் ஆழ்கிறார். பக்கத்து வீட்டுப் பெண்ணும், பள்ளித் தோழியுமான நித்யா மேனன், தனுஷுக்கு ஆறுதலாக இருக்கிறார். திருமணத்திற்காக பாங்காக் திரும்புமாறு ஷாலினி வலியுறுத்த, தனுஷ் தனது கிராமத்திலேயே தங்க முடிவு செய்கிறார். இதனால் கோபமடையும் ஷாலினியின் அண்ணன் அருண் விஜய், தனுஷை எதிர்க்க கிராமத்திற்கு வர, படத்தின் மீதிக் கதை உருக்கமான திருப்பங்களுடன் நகர்கிறது.
முருகன் கதாபாத்திரத்தில் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் (கிராமத்து இளைஞன், நகர வாழ்க்கை, ஆக்ஷன் ஹீரோ) மிரட்டுகிறார் தனுஷ். பெற்றோரை இழந்து வாடும் காட்சிகளில் அவரது உணர்ச்சிகரமான நடிப்பு கண்கலங்க வைக்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார். நித்யா மேனன், மண் சார்ந்த நாயகியாக அழகாகவும், இயல்பாகவும் நடித்து, தனுஷுடனான கெமிஸ்ட்ரியை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். அருண் விஜய் தனது கதாபாத்திரத்தை திறமையாகக் கையாண்டாலும், அவரது பங்களிப்பு சற்று மட்டுப்படுத்தப்பட்டதாக உணர்கிறது. ராஜ்கிரணின் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும், கதையின் மையமாக விளங்குகிறது. சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி ஆகியோரின் கதாபாத்திரங்கள் சற்று பயன்படுத்தப்படாமல் வீணாகியிருப்பது ஏமாற்றமளிக்கிறது.ஜி.வி. பிரகாஷின் இசை படத்தின் மிகப்பெரிய பலம். பாடல்களும், பின்னணி இசையும் கதையை உயர்த்துகின்றன. கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவு, குறிப்பாக இரவு காட்சிகளும், ஆக்ஷன் காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. ஜி.கே. பிரசன்னாவின் படத்தொகுப்பு படத்திற்கு சரியான வேகத்தை அளிக்கிறது.
தனுஷின் இயக்கம் மண்ணின் மணத்தை உணர வைக்கிறது. கிராமத்து வாழ்க்கையையும், குடும்ப பந்தத்தையும் உணர்ச்சிகரமாக சித்தரித்து, பார்வையாளர்களை கதையோடு இணைக்கிறார். முதல் பாதி உணர்ச்சி நிறைந்ததாகவும், கிராமத்து வாழ்க்கையை அழகாக சித்தரிப்பதாகவும் இருக்கிறது. இரண்டாம் பாதியில் சற்று வேகம் குறைந்தாலும், கிளைமாக்ஸ் திருப்தி அளிக்கிறது. ‘பெற்றோரையும், பிறந்த மண்ணையும் மறக்கக் கூடாது’ எனும் கருத்தை உணர்வுபூர்வமாக முன்வைக்கும் இப்படம், ஆபாசமோ, வன்முறையோ இல்லாமல், குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘இட்லி கடை’ ஒரு உணர்வுப்பூர்வமான குடும்பப் படம். தனுஷின் இயக்கமும், நடிப்பும், ஜி.வி. பிரகாஷின் இசையும், கிரணின் ஒளிப்பதிவும் படத்தை மனதிற்கு நெருக்கமாக்குகிறது. இரண்டாம் பாதியில் சிறு தொய்வு இருந்தாலும், மனதைத் தொடும் தருணங்கள் படத்தை மறக்க முடியாததாக்குகின்றன.
Tags: idli kadai, dhanush, nithya menon, gv prakashkumar, arun vijay, sathyaraj, shalini pande