இந்தியத் திரையுலகத்தில் ஒரு ஆக்ஷன் படம் எப்படி இருக்க வேண்டும் என இந்தியத் திரையுலகத்திற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது ‘கேஜிஎப் 2’ படக்குழு.

இயக்குனர் பிரசாந்த் நீல், நாயகன் யஷ் மற்றும் படக்குழுவினர் அனைவருமே அவர்களது சிறந்த, உயர்ந்த உழைப்பை இந்தப் படத்திற்காகக் கொடுத்திருக்கிறார்கள். அதற்கான வெற்றியும், வரவேற்பும், பெயரும் அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

2018ல் வந்த முதல் பாகத்தில் மும்பையிலிருந்து கேஜிஎப்பில் உள்ள தங்கச் சுரங்கத்திற்கு வந்து அடிமையாக வேலைக்குச் சேர்கிறார் ரவுடி ராக்கி. அந்த தங்கச் சுரங்கத்தையே தன் ஆளுமைக்குள் வைத்திருக்கும் கருடனை வெட்டிக் கொன்று தன் சாம்ராஜ்ஜியத்தை நிறுவுகிறான்.

இந்த இரண்டாம் பாகத்தில் தன் சாம்ராஜ்ஜியத்தை அழிக்கத் துடிக்கும் வில்லன் அகிரா, இந்திய அரசாங்கத்தின் பிரதம மந்திரி ஆகியோரிடமிருந்து காப்பாற்றத் துடிக்கிறார் ராக்கி. இந்திய அரசாங்கத்தையே எதிர்ப்பவரால் தன் சாம்ராஜ்ஜியத்தைக் காக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தில் ராக்கி ஆக யஷ் உண்மையிலேயே ராக் ஸ்டார் ஆக கலக்கியிருக்கிறார். அவரது நடை, உடை, பாவனை, உடல் மொழி என அனைத்திலுமே ஹீரோயிசம் ஊறிக் கிடக்கிறது. எத்தனை காட்சிகளில் ரசிகர்கள் தங்களை மறந்து கை தட்டினார்கள் என்பதற்கு போட்டியே வைக்கலாம்.

ராக்கியை எதிர்க்கும் இரண்டாம் பாகத்தின் முக்கிய வில்லன் அகிராவாக சஞ்சய் தத். கொடூரமான வில்லனாக மிரட்டுகிறார். ஒரு சாதாரண டானுடன் மோதுவதா என்று கேட்டுவிட்டு ராக்கி யார் என்று தெரிந்த பின் அவருக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டுத் தூக்கும் பிரதமராக ரவீனா டாண்டன். ராக்கியின் காதலியாக ஸ்ரீநிதி ஷெட்டி. இப்படத்திலும் அம்மா சென்டிமென்ட் உண்டு. கேஜிஎப்பில் வேலை பார்க்கும் ஈஸ்வரி ராவ், அவரது மகன் சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அம்மா சென்டிமென்ட்டைப் பிழிகிறார் இயக்குனர்.

புவன் கவுடாவின் ஒளிப்பதிவு, அன்பறிவுவின் சண்டைப் பயிற்சி, உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு, சிவகுமாரின் அரங்க அமைப்பு அனைத்துமே இந்திய சினிமாவை தொழில்நுட்ப ரீதியாக இன்னும் மேலே உயர்த்தியிருக்கிறது.

இந்த மாதிரியான மாறுபட்ட படைப்புகளில் இருக்கும் ஒரு சில குறைகளை கண்டுகொள்ளாமல் ரசித்துப் பார்க்கிறார்கள் ரசிகர்கள். 

கேஜிஎப் 2 - பல இயக்குனர்களுக்கு பொறாமை வரவைழைக்கும் ஒரு படைப்பாக அமைந்துவிட்டது.