மலையாளத்தில் வெளிவந்த ‘விக்ருதி’ என்ற படத்தை அதே உணர்வுடன் ரசிக்கும் விதத்தில் தமிழிலும் அற்புதமாக ரீமேக் செய்திருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் விளையாட்டாக, ஆர்வக் கோளாறாக சிலர் பதிவிடுவது சிலருக்கு எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை பாடமாக சொல்லியிருக்கிறது இந்தப் படம்.

இயக்குனர் சக்திவேல் பொருத்தமான நட்சத்திரத் தேர்வு, யதார்த்தமான காட்சி அமைப்புகளால் இந்தப் பயணத்தை கவனிக்க வைத்திருக்கிறார்.

வாய் பேச முடியாத காது கேட்காத குடும்பத் தலைவர் விதார்த். அவருடைய மனைவி லட்சுமிப்ரியாவிற்கும் கணவரைப் போன்றே குறைபாடு உள்ளது. ஒரு மகன், ஒரு மகள் என அவர்களது குடும்பம் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறது. ஒரு நாள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது விதார்த் தூங்கியிருப்பதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார் கருணாகரன். அதனால், விதார்த்தின் நிறைவான வாழ்க்கையில் தடங்கல் வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார் விதார்த். விருதுகளை அள்ளும் நடிப்பு. தவறே செய்யாமல் கஷ்டங்களை அனுபவிக்கும் ஒருவரது மனநிலையை அவ்வளவு இயலபாய் வெளிப்படுத்தி இருக்கிறார். ‘மைனா’ படத்திற்குப் பிறகு விதார்த்திற்குப் பெயர் சொல்லும் கதாபாத்திரம்.

சோஷியல் மீடியா ஆர்வக்கோளாறு கதாபாத்திரத்தில் கருணாகரன். பார்க்கும் எல்லாவற்றையும் சோஷியல் மீடியாவில் பதிவிடும் பலர் இந்தக் காலத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்குத் தேவை லைக், ஷேர். இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது அப்படிப்பட்டவர்கள் திருந்த வேண்டும்.

விதார்த் மனைவியாக லட்சுமிப்ரியா, கருணாகரன் காதலியாக மசூம் சங்கர் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

ஷமந்த் நாக் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளில் உருக வைக்கிறது. இப்படி ஒரு இயல்பான படத்தைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது. 

சமூக நலனில் அக்கறை கொண்ட இப்படிப்பட்ட படங்களை சினிமா ரசிகர்கள் கவனித்து வரவேற்க வேண்டும்.