மலையாளத்தில் வெளிவந்த ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘கூகுள் குட்டப்பா’.

அறிமுக இயக்குனர்கள் சபரி - சரவணன் இணைந்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரலமான இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான லாஸ்லியா கதாநாயகியாக நடிக்க, கேஎஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரு வயதான மனிதருக்கும் ஒரு இயந்திர மனிதருக்கும் இடையில் உருவாகும் பாசப்பிணைப்புதான் இந்தப் படம்.

ஜெர்மனிக்கு வேலைக்குப் போகும் தர்ஷன், கிராமத்தில் தனியாக இருக்கும் அப்பா கேஎஸ் ரவிக்குமாருக்கு உதவியாக அவரது கம்பெனி உருவாக்கமான ஒரு இயந்திர மனிதனை (ரோபோ) கொடுக்கிறார். அந்த இயந்திர மனிதனுடன் மிகவும் நெருங்கிப் பழகிவிடுகிறார் ரவிக்குமார். ஒரு கட்டத்தில் அந்த ரோபோவைப் பிரியும் நேரம் வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேஎஸ் ரவிக்குமார் குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ரோபோவை ஒரு குழந்தை போல பாவித்து அவர் பழகுவது கண்களைக் கலங்க வைக்கிறது. அதைப் பிரிய முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பில் உருக வைத்திருக்கிறார்.

தர்ஷன், லாஸ்லியா இருவருக்கும் அதிக வேலையில்லை. இருந்தாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். யோகி பாபு ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். இவரது கதாபாத்திரத்தை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிக்கும் விதமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். சென்டிமென்ட் அதிகமாக இருக்கிறது, கூடவே, காமெடியையும் அதிகம் கலந்து கொடுத்திருக்கலாம்.