ஒரு மொழியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படத்தை மற்றொரு மொழியில் ரீமேக் செய்வது அவ்வளவு சுலபமல்ல. ஒரிஜனல் படத்தில் இருந்த உணர்வை அப்படியே கொண்டு வர வேண்டும். ஒரு சில ரீமேக் படங்களில்தான் அது ஒரிஜனலைப் போலவே அமையும். இந்த ‘விசித்திரன்’ படம், மலையாள ஒரிஜனலான ‘ஜோசப்’ படம் போல அப்படியே அமைந்துள்ளது.

மலையாளப் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் யதார்த்தமாக நடிப்பார்கள். இந்தப் படத்திற்கான நட்சத்திரத் தேர்வில் அந்த யதார்த்த நடிப்பை மனதில் வைத்து பொருத்தமான நட்சத்திரங்களைத் தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் பத்மகுமார்.

ஆர்கே சுரேஷ், பூர்ணா, இளவரசு, மாரிமுத்து உள்ளிட்ட பொருத்தமான நடிகர்கள் இப்படத்தைத் தங்களது நடிப்பால் வேறு ஒரு கட்டத்துக்குக் கொண்டு செல்கிறார்கள்.

விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஆர்கே சுரேஷ். பணியில் இருக்கும் போது எந்த ஒரு வழக்கையும் புத்திசாலித்தனமாக விசாரிப்பவர். அவரை விட்டுப் பிரிந்து போன மனைவி பூர்ணா ஒரு விபத்தில் சிக்கி மரணமடைகிறார். ஆனால், அது விபத்தல்ல கொலை எனக் கண்டுபிடிக்கிறார் ஆர்கே சுரேஷ். அதற்கான விசாரணையை ஆரம்பித்து உண்மைக் குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆர்கே சுரேஷ் நடுத்தர வயது மனிதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மகளை ஏற்கெனவே விபத்தில் பறி கொடுத்த சோகம், பிரிந்து போன மனைவியால் வந்த மற்றொரு சோகம் என விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரம். அவ்வளவு சோகத்தையும் தனது நடிப்பில் வெளிப்படுத்துகிறார். பிரிந்து போன மனைவிதானே என்று நினைக்காமல் அவரது மரணத்திற்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்க இறங்குகிறார். தன் உயிரை விட மற்றவர்களின் உயிர் பெரிது என நினைக்கும் கிளைமாக்ஸ் காட்சியில் அவரது கதாபாத்திரம் மீது பெரும் மதிப்பு வந்துவிடுகிறது.

பூர்ணா, இளவரசு, மாரிமுத்து, பகவதி பெருமாள் ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் மிக இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ்குமார் இசை படத்திற்கு பெரும் பிளஸ் பாயின்ட். உணர்வுகளின் குவியலாய் இருக்கும் படத்தில் அவரது பின்னணி இசை தனி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

வித்தியாசமான படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் இந்த ‘விசித்திரன்’ஐ நிச்சயம் பார்க்கலாம்.