‘பேச்சுலர், செல்பி’ படங்களைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ்குமாருக்கு மற்றுமொரு வெற்றிப் படமாக இப்படம் அமையும் என தாராளமாகச் சொல்லலாம். ‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் உருவாகியுள்ள பரபரப்பான ஆக்ஷன் படம் இது.

மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முடித்தவர் ஜிவி பிரகாஷ்குமார். புதிது புதிதாக கருவிகளைக் கண்டுபிடித்து அதற்காக காப்புரிமை வாங்க முயற்சி செய்கிறார். இந்நிலையில் ஒரு குழந்தை ஆழ்துளை குழாய் துளையில் விழுந்து விடுகிறது. அக்குழந்தையைக் காப்பாற்ற ஒரு கருவி செய்து கொடுத்து காப்பாற்றுகிறார் ஜிவி. அந்த சம்பவத்தின் போது நடக்கும் ஒரு பெரும் குற்றத்தையும் தடுக்க முயல்கிறார் ஜிவி. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கடந்த சில படங்களாக தனக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து அதில் சிறப்பாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ்குமார். இப்படத்தின் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகவே கவரும். நம்மில் ஒருவராக அக்கதாபாத்திரத்தைப் பார்க்க முடிவதே அதற்கான வெற்றி.

படத்தின் நாயகி மகிமா நம்பியாருக்கு அதிக வேலையில்லை. வில்லனாக சித்தார்த் நடித்துள்ளார். யார் இவர் எனக் கேட்க வைக்கிறார். கெட்ட போலீசாக ஹரிஷ் பெரடி. ஜிவியின் அப்பாவாக ஆடுகளம் நரேன்.  இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என உழைக்கும் நேர்மையான போலீசாக  நடித்திருக்கிறார். ஜிவியின் நண்பராக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் காளி வெங்கட்.

படத்தில் ஜிவியின் பின்னணி இசை பரபரக்க வைக்கிறது. நாமக்கல் பின்னணியில் நகரும் கதை, யதார்த்தமான காட்சியமைப்புகளுடன் செல்கிறது.

இயக்குனர் ரவி அரசு தன்னுடைய முதல் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் முத்திரை பதித்துள்ளார்.