2019ல் வெளிவந்த ‘மெரினா புரட்சி’ படத்தை இயக்கிய எம்எஸ் ராஜ் இயக்கத்தில் வந்துள்ள படம்தான் இந்த ‘முத்து நகர் படுகொலை’.

ஸ்டைர்லைட் ஆலை போராட்டத்தில் தமிழ்நாடு காவல் துறையால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட 13 அப்பாவி உயிர்கள் எப்படி இறந்தார்கள் என்பதைப் பற்றியும், அந்தப் போராட்டம் எதற்காக, ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதி மக்களுக்கும், மக்களின் வாழ்வியலுக்கும் என்னென்ன துன்பங்கள் நிகழ்ந்தது என்பதையும் அனைவருக்கும் புரியும் விதத்தில் ஒரு டாகுமென்டரி படமாகக் கொடுத்து பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் எம்எஸ் ராஜ்.

அரசு அனுமதித்த காப்பர் உற்பத்தி அளவை மட்டும் தயாரிக்காமல், அதை விடவும் அதிகமான காப்பரைத் தயாரித்து அதிலிருந்து வெளியேற்றப்படும் நச்சு கலந்த புகையை அரசு விதிகளை மீறி வெளியேற்றுவது, அதிலிருந்து வெளியாகும் கழிவுகளால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவது என அந்த காப்பர் தொழிற்சாலை செய்த அத்து மீறல்களை அதிர்ச்சி தரும் விதத்தில் வெளி உலகிற்குச் சொல்கிறார் இயக்குனர்.

அந்த ஆலை கழிவால் பலருக்கும் கேன்சர் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் வருகிறது. அதனால் பெரிதும் பாதிப்படடைந்த ஒரு சிறு கிராமத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட அறப்போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தூத்துக்குடி மக்கள் அனைவரும் பங்கு கொள்ளும் விதத்தில் எப்படி வளர்ந்தது என்பதையும் படம் காட்டுகிறது.

ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் பலரும் கலந்து கொண்ட போராட்டத்தில் ஆரம்பம் முதலே இடைவிடாமல் போராடியே சிலரைக் குறி வைத்து தாக்கி சட்டத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தி கொன்றதாகக் குற்றம் சாட்டுகிறார் இயக்குனர்.

கணவனை, சகோதரனை, மகளை, சகோதரியை, அப்பாவைப் பறி கொடுத்தவர்களை நேரில் பேட்டி கண்டு அவர்களது துயரங்களை நாம் தாங்க முடியாத அளவிற்குச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைப் பற்றி டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்பது எவ்வளவு பொறுப்பற்ற பேச்சு என்பது இந்த படத்தைப் பார்க்கும் போது அனைவருக்கும் தெரியும்.

மிகவும் திட்டமிடப்பட்டு அறவழியில் போராடியவர்களை சுட்டுக் கொன்ற காவல் துறையின் செயல் எந்த அளவிற்கு அநியாயமானது என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போது புரியும்.

இந்தப் படம் தமிழக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பாடம்.

இப்படத்தைப் பார்க்க www.tamilsott.com மற்றும் vimeo.com/ondemand/pearlcitymassacre என்ற இணைய முகவரியில் பணம் செலுத்திப் பார்க்கலாம்.