தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல புதிய முயற்சியாளர்கள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்களது தனித்துவமான படங்களால் கவனிக்கப்படுகிறார்கள். அப்படி கவனிக்க வைக்கும் அளவிலான படமாக இந்த ‘போத்தனூர் தபால் நிலையம்’ படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர்  பிரவீண். அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

90களில் நடக்கும் கதை. கம்ப்யூட்டர் அப்போதுதான் மெல்ல மெல்ல தனது கிளையை விரித்த காலம். தனது காதலி அஞ்சலி ராவ், நண்பன் வெங்கட் ஆகியோருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் வியாபாரம் செய்ய நினைக்கிறார் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிரவீண். இதனிடையே, பிரவீணின் போஸ்ட் மாஸ்டர் அப்பா அலுவலக பணம் ஏழு லட்ச ரூபாயைப் பறி கொடுக்கிறார். திருட்டுப் போன அந்தப் பணத்தைக் கண்டுபிடிக்க பிரவீண் களத்தில் இறங்குகிறார். அதைக் கண்டுபிடித்தாரபா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

90களில் கோயம்பத்தூர், போத்தனூர் எப்படி இருந்ததோ அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது படக்குழு. போத்தனூர் தபால் நிலையம், பிரவீண் வீடு, போத்தனூர் சாலைகள் ஆகியவற்றைப் பார்க்கும் போது அந்த 90களுக்கே சென்று விட்டோமோ என நினைக்க வைக்கிறது. அதற்காக இயக்குனர் பிரவீண், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் ஆகியோரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

பிரவீண், அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர் படம் முழுவதுமே வருகிறார்கள். தானே இயக்கி நடிக்கும் படம் என்பதால் தனக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் மற்ற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார் பிரவீண். அவருடைய அப்பாவாக நடித்திருக்கும் ஜெகன் கிரிஷ், கேஷியர் ஆக நடித்திருக்கும் சீதாராமன் ஆகியோருக்கும் படத்தில் முக்கியத்துவம் உண்டு. இவர்கள் மட்டுமல்லாது மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் நகைச்சுவை, திரைக்கதையில் விறுவிறுப்பு சேர்த்திருந்தால் படத்திற்கு பிளஸ் பாயின்டாக அமைந்திருக்கும். இருந்தாலும் ஒரு சுவாரசியமான படத்தைப் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.