அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சிபி சத்யராஜ், தான்யா, கேஎஸ் ரவிக்குமார், ராதாரவி, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மாயோன்’.

தொல்லியல், ஆன்மீகம், புராதானம், புதையல், அறிவியல் என கலந்த ஒரு வித்தியாசமான திரைப்படம் இந்த ‘மாயோன்’.

முதல் படத்திலேயே ஒரு சவாலான கதையை எடுத்துக் கொண்டு அதை ரசிக்கும் விதத்தில் கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் கிஷோர்.

தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயில் ஒன்று அபூர்வமான ஒரு கோயில். அங்கு மாலை 6 மணிக்கு மேல் கோயிலை சாத்திவிடுவார்கள். அதன் பிறகு அங்கு யாருக்கும் அனுமதியில்லை. அதற்குப் பிறகு அத்துமீறி நுழைபவர்களுக்கு மனநல பாதிப்பும், உடல் நல பாதிப்பும் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட கோயிலில் புதையல் இருப்பதாக தொல்லியல் துறை கண்டுபிடிக்கிறது. அந்தப் புதையலைக் கடத்த வேண்டும் என அதே துறையில் வேலை பார்க்கும் சிபி சத்யராஜ், ஹரிஷ் பெரடி திட்டமிடுகிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கோயில், அதைச் சுற்றி அமைந்துள்ள இடம், புதையல் இருக்கும் பாதாள அறை என படம் முழுவதுமே பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது. திட்டமான பட்ஜெட்டில் அதை நிறைவாகச் செய்திருக்கிறது படக்குழு. இன்னும் அதிக பட்ஜெட் இருந்திருந்தால் இன்னும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சிபி சத்யராஜ், தொல்லியல் துறையில் ஒரு திறமைசாலியான அதிகாரி. எந்த ஒரு பழங்காலப் பொருட்களையும் பற்றி உடனுக்குடன் சொல்லும் திறமை படைத்தவர். அவர் புதையல் கடத்தலில் ஈடுபடுகிறாரா என்பது ஆச்சரியம்தான். ஆனாலும், ஒரு கதாநாயகன் என்ன செய்வார் என்பதை கடைசியில் சொல்லிவிடுகிறார் இயக்குனர்.

கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன், தொல்லியல் துறை அதிகாரியாக கேஎஸ் ரவிக்குமார், கோயிலைக் காப்பாற்றி வரும் ஊர் தலைவராக ராதாரவி, வில்லனாக ஹரிஷ் பெரடி நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் வழக்கம் போல ரசிக்க வைக்கின்றன. ‘மாயோனே மணிவண்ணா’ பாடல் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கும் தெய்வ கானமாய் அமைந்துள்ளது.

வித்தியாசமான படங்களை விரும்பும் ரசிகர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.