பீஸ்ட் - விமர்சனம்

13 Apr 2022

‘கோலமாவு கோகிலா, டாக்டர்’ போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த இளம் இயக்குனர் நெல்சன், மாஸ் ஹீரோவான விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வந்த போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. அந்த எதிர்பார்ப்புக்கேற்றபட நெல்சன் படத்தைக் கொடுத்திருக்கிறாரா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் எழும் கேள்வியாக இருக்கும்.

விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவோ ஒரே ஒரு ஷாப்பிங் மாலுக்குள் வைத்து முழு திரைக்கதையையும் வடிவமைத்திருப்பது என்னவோ போல் உள்ளது. அதைச் சரி செய்யும் விதமாக ஆரம்பத்திலும், கிளைமாக்சிலும் சில ஆக்ஷன் காட்சிகளை வைத்து விஜய் ரசிகர்களைத் திருப்திபடுத்தி இருக்கிறார் நெல்சன்.

சில பல கேள்விகள் எழுந்தாலும் இது விஜய் படம். தனியொருவனாக முழு படத்தையும் தாங்கி தன்னை நம்பி வரும் ரசிகர்களை ஏமாற்றமடைய வைக்காமல் தனக்காகப் பார்க்குமாறு ரசிக்க வைத்திருக்கிறார் விஜய்.

சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றை பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஹைஜாக் செய்து அங்குள்ளவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள். இந்திய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தங்களது தலைவன் ஒருவனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறார்கள். அந்த மாலுக்குள் ஒரு வேலையாகச் சென்ற முன்னாள் ரா அதிகாரியான விஜய், தீவிரவாதிகளை எதிர்கொண்டு பணயக் கைதிகளைக் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விஜய் ஒரு திறமையான ரா அதிகாரி என்பதை நிரூபிக்க ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கே அவர் சென்று அங்கு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துகிறார் என்று நம்ப வைக்கிறார்கள். அது போல கிளைமாக்சில் பைட்டர் விமானத்தை எடுத்துக் கொண்டு இந்திய அரசு விடுவித்த தீவிரவாதிகளின் தலைவனை மீண்டும் கைது செய்து செய்து அழைத்து வருகிறார். நம்ப முடியாத காட்சிகளாக இருந்தாலும் இவற்றை வைத்தே படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தால் விஜய் ரசிகர்கள் முழு திருப்தி அடைந்திருப்பார்கள். 

படத்தில் விஜய்க்கு ஒரு ஜோடி வேண்டும் என்பதற்காக பூஜா ஹெக்டே. இருவரது ஆரம்ப சந்திப்புக் காட்சிகள் மிகவும் சுவாரசியம். விஜய்க்கு பொருத்தமான ஜோடியாக இருக்கிறார் பூஜா. ஆனால், அதிகமான காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாதது ரசிகர்களுக்கு சோகம்.

சீரியசான கதையாக இருந்தாலும் ஆங்காங்கே தனது ஒன் லைன் வசனங்களால் சிரிக்க வைக்கிறார் விடிவி கணேஷ். படத்தில் பிரபலமான வில்லன் இல்லாதது ஒரு குறை. செல்வராகவன் முடிந்த வரையில் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

அனிருத் இசையில் அரபிக்குத்து படத்திற்குள் வந்துவிடுகிறது. ஜாலி ஓ ஜிம்கானா படம் முடிந்து வருகிறது. இன்னும் இரண்டு மூன்று பாடல்கள் இருந்திருந்தால் படத்திற்கு உதவியாக இருந்திருக்கும். பின்னணி இசையில் பரபரப்பூட்டுகிறார் அனிருத்.

ஷாப்பிங் மாலை பிரம்மாண்டமாக அமைத்த கலை இயக்குனருக்கும், அதில் விதவிதமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கும் பாராட்டுக்கள்.

Tags: beast, vijay, nelson, pooja hegde, anirudh, sun pictures

Share via: