தமிழ் சினிமாவில் போலீஸ் படங்கள் என்றாலே ஆக்ஷன் படங்களாக மட்டுமே இருக்கும். வில்லன் அல்லது அநீதியை எதிர்த்துப் போராடும் போலீஸ் அதிகாரியாக நாயகன் நடிக்கும் படங்களைத்தான் நிறைய பார்த்திருக்கிறோம்.

ஆனால், இந்த ‘டாணாக்காரன்’ நிஜமாகவே வித்தியாசமான ஒரு படம். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதை என படக்குழுவினர் நெஞ்சை நிமிர்த்தி தாராளமாகச் சொல்லலாம்.

போலீஸ் பயிற்சிக் கல்லூரிதான் கதைக்களம், அதில் பயிற்சிக்காக வரும் சாதாரண இளைஞர்களும், வருடங்கள் கடந்து, போராடிக் கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வரும் சிலரைப் பற்றிய கதைதான் இந்தப் படம். இப்படியெல்லாமா போலீஸ் பயிற்சிகள் நடக்கிறது என்பதை அதிர்ச்சியும், சோகமும் கலந்த படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தமிழ்.

போலீஸ் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சிக்காக வருகிறார் விக்ரம் பிரபு. எம்ஏ கிரிமினாலஜி படித்து முடித்தவருக்கு கொஞ்சம் வாய் அதிகம். ஆரம்பத்திலேயே பயிற்சி தரும் அதிகாரிகளை எதிர்த்து சில கேள்விகளைக் கேட்கிறார். அது அந்த அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. தங்களை மீறி எப்படி போலீஸ் ஆவாய் பார்த்துவிடுகிறோம் என சவால் விடுகிறார்கள் அதிகாரிகள். சவாலை மீறி வெற்றி பெற்றாரா இல்லையா விக்ரம் பிரபு என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அப்பாவின் ஆசையை நிறைவேற்ற போலீஸ் பயிற்சிக்கு வரும் ஏழைக் குடும்பத்து இளைஞன் அறிவு கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு. அச்சு அசலாக அந்தக் கதாபாத்திரத்தை நம் கண்முன் நிறுத்துகிறார். அதிகாரிகளை எதிர்த்துப் போராடி காக்கிச் சட்டை அணிவது அவ்வளவு சுலபமல்ல என்பதை உணர்ந்து போராடுகிறார். விக்ரம் பிரபுவின் நடிப்பை வெளிக் கொணர்ந்த படங்களில் இந்தப் படத்திற்கும் முக்கிய இடமுண்டு.

விக்ரம் பிரபுவிற்கு பயிற்சி கொடுக்கும் தலைமைக் காவலராக லால். என்ன ஒரு மிரட்டல் நடிப்பு. பள்ளிகளில் கூட இப்படி ஒரு மிரட்டலான ஆசிரியரைப் பார்த்திருக்க முடியாது. காட்சிக்குக் காட்சி மிரட்டுகிறார் லால்.

படத்தில் கதாநாயகி இருக்க வேண்டுமென்பதற்காக அஞ்சலி நாயர். தேவையான காட்சிகளில் தேவையான அளவு மட்டுமே வந்து போகிறார்.

போஸ் வெங்கட், எம்எஸ் பாஸ்கர், பாவெல் நவகீதன், மதுசூதன ராவ் மற்ற கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்துள்ள நடிகர்கள்.

ஜிப்ரான் இசை, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக போலீஸ் பயிற்சி மைதானத்தில்தான் முழு படமும் நகர்கிறது. கடுமையாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சீரியசான கதையாக மட்டுமே இருப்பதும், இடைவேளைக்குப் பின் என்ன நடக்கும் என யூகிக்க முடிவதும் மட்டுமே படத்தின் மைனஸ் பாயின்ட். மற்றபடி புதுவித முயற்சிக்காக குழுவினரை சல்யூட் அடித்துப் பாராட்டலாம்.