இரும்புத்திரை - இடைவேளை வரை...விமர்சனம்
10 May 2018
தமிழ் சினிமாவில் இதற்கு முன் ஒரு படத்தின் பத்திரிகையாளர் காட்சியை இடைவேளை வரை திரையிட்டுக் காட்டியதில்லை.
ஹாலிவுட்டில்தான் அவர்களது படங்களின் ஒரு மணி நேரத்தை முன்னதாகவே காட்டும் வழக்கம் உண்டு. அப்படி ஒரு வழக்கத்தை ‘இரும்புத்திரை’ படத்திற்கு புதிதாக ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அவர்கள் எந்த எண்ணத்தில் அதை திரையிட்டார்களோ, அந்த எண்ணம் ஈடேறும் என்பதே உண்மை.
இடைவேளை வரை படத்தைப் பார்த்த பிறகு உடனே, இடைவேளைக்குப் பிறகான படத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தூண்டுகிறது.
விஷால், ஒரு ராணுவ அதிகாரி. எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணம் உடையவர். சிறு வயதிலேயே அப்பா வாங்கிய கடன்களால் மனமுடைந்து 11 வயதில் ராணுவ பள்ளியில் வந்து சேர்ந்து படித்து அதிகாரியாகிறார். அவருடைய கோபத்தைக் குறைத்துக் கொள்ள, குடும்பத்தினருடன் பழகினால் நல்லது என சைக்காலஜி மருத்துவரான சமந்தா சொல்கிறார். அதனால், பல வருடங்களுக்குப் பிறகு அப்பா டெல்லி கணேஷ், தங்கை ஆகியோரைப் பார்க்க ஊருக்குச் செல்கிறார்.
அங்கு பணம் இல்லாத காரணத்தால் தங்கையின் திருமணம் தடைபட்டு நிற்கிறது தெரிகிறது. மீண்டும் சென்னைக்கு வந்து வங்கிகளில் கடன் வாங்க முயற்சிக்கிறார். ஆனால், அவருக்கு யாரும் கடன்தர மறுக்கிறார்கள். கடைசியில் அப்பா பெயரில் கடை ஆரம்பிப்பதாகப் பொய் சொல்லி கடன் பெறுகிறார். அந்த பணத்தை வங்கியில் போட்டு வைக்கிறார்கள். ஆனால், அந்தப் பணம் திடீரென மாயமாகிறது.
பணம் எப்படி பறி போனது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் விஷால். ஒருவனை விரட்டிப் பிடிக்கும் சமயத்தில், விஷாலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசுபவர் விஷாலை மிரட்டுகிறார். அதோடு விஷால் பிடித்து வைத்தவன் தப்பி ஓடும் போது, வேன் மோதி கொல்லப்படுகிறான். டெக்னிக்கலா நடக்கும் இந்த விஷயங்களைக் கண்டு மிரட்சியாய் நிற்கிறார் விஷால்.
படத்தின் வில்லன் யார் என்ற சஸ்பென்ஸ் வைத்து இடைவேளையை முடித்திருக்கிறார்கள். அந்த வில்லன் யார் ?, அவர் எதற்காக அவ்வளவு விஷயங்களைச் செய்கிறார் என்பது இடைவேளைக்குப் பின்னர் படத்தில் சொல்லப்படும் கதையாக இருக்கலாம்.
இதுவரை பார்த்த விஷாலை விட இந்தப் படத்தில் பார்க்கும் விஷால் துடிப்பாக இருக்கிறார். அவருக்கும் சமந்தாவுக்கும் இடையிலான காட்சிகளில் ரொமான்ஸ் இல்லாத ஒரு பழக்கம் புதிதாக உள்ளது. தங்கையின் திருமணத்தை முடிக்க முயற்சிப்பவருக்கு பல அவமானங்கள் கிடைக்கிறது. குடும்பத்திலிருந்து விலகியிருந்தாலும், தங்கைக்காக கடன் வாங்க துடிப்பதில் பாசமான அண்ணனாக உருக வைக்கிறார். இடைவேளை வரை விஷால் நடிப்பில் காதல், நகைச்சுவை, அன்பு பாசம் ஆகியவையே உள்ளது. அவருடைய ஹீரோயிசம் இடைவேளைக்குப் பின்னர்தான் வரும் எனத் தெரிகிறிது.
சமீப கால தமிழ் சினிமாவில் ஒரு நாயகியை இந்த அளவிற்கு பாந்தமாக காட்டியிருக்கிறார். மனநல மருத்துவராக சமந்தா எந்த கிளாமரும் இல்லாமல் புடவையில் புன்னகைக்க வைக்கிறார். பேசும் போதெல்லாம் உதட்டோரப் புன்னகையும், கண்களில் இருக்கும் குறும்பும் ரசிக்க வைக்கிறது.
ரோபோ சங்கர் விஷாலின் தாய் மாமன். அடிக்கடி அவர் அடிக்கம் கமெண்ட்டுகள் சிரிப்பைத் தெறிக்க விடுகின்றன. விஷாலின் அப்பாவாக டெல்லி கணேஷ். கடன் வாங்குவதில் கஷ்டப்படாதவர்.
டெக்னிக்கல் த்ரில்லர் படம் என சொல்லப்பட்டாலும் இடைவேளை வரை சென்டிமென்ட் படமாகவே நகர்கிறது. சுவாரசியமான காட்சிகள், தொய்வில்லாத திரைக்கதை ரசிக்க வைக்கிறது.
விறுவிறுப்பும், பரபரப்பும் இடைவேளைக்குப் பின் வரும் என்ற ஆவலுடன் பார்க்கக் காத்திருக்க வேண்டும்.
அறிமுக இயக்குனர் மித்ரன், முதல் படம் என்று சொல்ல முடியாதபடி படத்தைக் கொடுத்திருக்கிறார்.