தியா - விமர்சனம்
30 Apr 2018
தமிழ் சினிமாவில் பேய் படம் என்றாலே ஒரு பெண்ணையோ, ஆணையோ யாராவது கொலை செய்தால், தன்னைக் கொலை செய்தவர்களை அவர்கள் பேயாக வந்து பழி வாங்குவதாகத்தான் பல படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் படத்தில் பிறக்காத ஒரு குழந்தை பேயாக வந்து பழி வாங்குவதுதான் படத்தின் கதை.
‘தி அன்பார்ன் பேபி’ என்ற தாய்லாந்து படத்தின் கதையைத் தழுவி, கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்ட கதை என சமூக வலைத்தளங்களில் இப்படம் பற்றி விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. காப்பியடித்த கதையாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி படத்தைக் கொடுத்துவிடுவார் இயக்குனர் விஜய்.
இந்தப் படத்திலும் சென்டிமென்ட்டுக்குக் குறை வைக்காமல் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
மருத்துவக் கல்லூரிக்குப் படிக்கச் செல்வதற்கு முன்பாகவே தாய்மை அடைகிறார் சாய் பல்லவி. அதனால், அவரையும், அவருடைய காதலர் நாக சௌரியா-வையும் அவர்களது பெற்றோர் கடுமையாகத் திட்டுகிறார்கள். இருவரையும் படிப்பு முடியும் வரை பிரிந்திருக்கச் சொல்லிவிட்டு, சாய் பல்லவியின் கருவைக் கலைத்து விடுகிறார்கள்.
5 வருடங்கள் கழித்து இருவருக்கும் திருமணம் நடந்து தனிக் குடித்தனம் வருகிறார்கள். வந்த இடத்தில் சாய் பல்லவிக்கு அடிக்கடி ஒரு ஐந்து வயது சிறுமி தென்படுகிறாள். அடுத்து நாக செளரியா அப்பா நிழல்கள் ரவி, சாய் பல்லவி அம்மா ரேகா, தாய் மாமா ஜெய்குமார், கருக்கலைப்பு செய்த டாக்டர் சுஜிதா மர்மமாக இறக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘பிரேமம்’ மலையாளப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த நடிகையாக ஆனார் சாய் பல்லவி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு தமிழில் அறிமுகமாக இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது. சின்னச் சின்ன முகபாவங்களிலும் தனி முத்திரை பதிக்கிறார் சாய் பல்லவி.
நாக சௌரியா எதற்கு இந்தப் படத்தில் நடித்தார் என்றே தெரியவில்லை. ஒரு காட்சியில் கூட அவருடைய முகம் மகிழ்ச்சியாக இல்லை. எதையோ பறி கொடுத்தவர் போலவே நடித்திருக்கிறார். இந்தப் படம் பற்றி அவர் இதுவரை ஒரு பேட்டி கூட கொடுத்ததில்லை, எந்த பிரமோஷனுக்கும் வரவில்லை. ஆக, படப்பிடிப்பிலேயே கடமைக்காக நடித்திருக்கிறார் போலிருக்கிறது. அது அவருடைய தொழிலுக்கே அவர் செய்யும் துரோகம்.
‘தியா’ என்ற டைட்டில் ரோலில் பேபி வெரோனிகா. இப்படிப் பார்க்கிறார், அப்படிப் பார்க்கிறார். ஆனால், அம்மாவைப் பார்க்கும் போது மட்டும் ஆசை ஆசையாகப் பார்க்கிறார். ஆனால், பேய் என்றாலே வெள்ளை உடையில்தான் வர வேண்டும் என்பதை யார் எழுதி வைத்தார்களோ ?.
நிழல்கள் ரவி, ரேகா, சுஜிதா, ஜெய்குமார் கொஞ்ச நேரமே வந்து பரிதாபமாக இறந்து போகிறார்கள். ஆர்ஜே பாலாஜி, இன்ஸ்பெக்டராக நடிப்பதெல்லாம் காவல் துறைக்கே இழுக்கு. காவல் துறையை தயவு செய்து காமெடியாக்கி விடாதீர்கள் இயக்குனரே.
குழந்தைகள் கொலை செய்வதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் சில வாரங்களே ஆன கரு, ஐந்து வருடம் கழித்து பேயாக வந்து கொலை செய்கிறது என்பதெல்லாம் ரொம்பவே ஓவரான கற்பனை.
சாம் சிஎஸ் பின்னணி இசையும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் படத்தில் பாராட்ட வைக்கின்றன.
தியா - தேவையா ?