அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் - விமர்சனம்

26 Apr 2018
ஒரு படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே சின்னஞ்சிறு குழந்தைகளிடம் கூட இவ்வளவு எதிர்பார்ப்பா ? என பேராவலைக் கிளப்பியிருக்கிறது ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம். நேரடித் தமிழ்ப் படங்களே இந்தப் படத்திற்கு முன் வந்தால் சமாளிக்க முடியாது என ஒதுங்கிவிட்டார்கள். அடுத்த நான்கு நாட்களுக்கு பல தியேட்டர்களில் இப்படத்தின் காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல், அது ஒன்றே போதும் இது எப்படிப்பட்ட படம் என்பதைப் புரிய வைக்க... ஹாலிவுட் படங்களின் சூப்பர் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து இந்த பிரபஞ்சத்தையே ஆட்டிப் படைக்க நினைக்கும் வில்லன் தேனோஸ்-ஐ எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. அயர்ன் மேன், தார், ஹல்க், ஸ்பைடர், பிளாக் பாந்தர், ஸ்டீவ் ரோஜர்ஸ், ப்ளாக் விடோவ் இன்னும் சிலர் எப்படி திட்டம் தீட்டி தேனோஸ்-ஐயும் அவனது கூட்டாளிகளையும் முறியடிக்கப் பயணப்படுகிறார்கள் என்பதை இரண்டரை மணி நேரமும் விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குனர்கள் ஆன்டனி ரஸ்ஸோ, ஜோ ரஸ்ஸோ. படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் தேனோஸ்-தான் படத்திலேயே அதிக நேரம் வருகிறார். அதன் பின் அயர்ன் மேன், தார் ஆகியோர் இருக்கிறார்கள். அயர்ன் மேன், தார் இவர்கள் இருவரும் தனித் தனியாக தேனோஸ்-ஐத் தாக்கத் திட்டமிட்டு பின் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். மற்றொரு பக்கம் கேப்டன் அமெரிக்கா,  வகான்டா குழுவினருடன் சேர்ந்து தேனோஸ்-ஆட்களை எதிர்த்து கடுமையாகப் போராடுகிறார். இப்படி ஆளுக்கொரு பக்கம் சேர்ந்து தேனோஸ்-ஐ அதிசய கற்களை எடுக்க விடாமல் தடுக்க தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அதையும் மீறி தேனோஸ் எப்படி பதிலடி கொடுக்கிறார் என்பது பரபரப்பான ஒன்று. 3 டி-யில் பார்க்கும் போது ஒவ்வொரு கிரகமும் கற்பனைக்கும் எட்டாத ஒரு அரங்க அமைப்பைக் காட்டுகின்றன. நியூயார்க் சிட்டியில் தேனோஸ் அடியாட்களை எதிர்த்து அயர்ன் மேன், ஸ்பைடர் மேன் சண்டையிடும் காட்சி, இடைவேளைக்குப் பின் வரும் ஒவ்வொரு சண்டைக் காட்சியும் சீட்டின் நுனிக்கே நம்மை வரவைக்கும். படத்தில் இத்தனை சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும், தேனோஸ் ஆக நடிக்கும் ஜோஷ் ப்ரோலின் ரசிக்க வைக்கிறார். அத்தனை சூப்பர் ஹீரோக்களையும் சமாளிப்பதென்றால் சும்மாவா ?. கிராபிக்ஸ் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரள வைக்கின்றன. ஆக்ஷன், அதிரடி இருக்கும் அளவிற்கு படத்தில் சென்டிமென்ட்டும் உண்டு. தமிழில் வசனங்களிலும் முடிந்த அளவிற்கு நகைச்சுவையைச் சேர்த்திருக்கிறார்கள். ‘பாகுபலி’ போல பலசாலியா’ என்றெல்லாம் வசனங்கள் வருகின்றன. இந்தக் கோடை விடுமுறையில் குழந்தை, குட்டீஸ்களுடன் சென்று பார்க்க ஒரு ஜாலியான என்டர்டெய்னிங்கான படம்.

Share via: