கல்யாண் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், காஜல் அகர்வால், யோகிபாபு, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் படம். 

இன்ஸ்பெக்டராக இருக்கும் காஜல் அகர்வால் சிறையிலிருந்து தப்பித்த தாதாவான கேஎஸ் ரவிக்குமாரைப் பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார். ஒரு முறை கேஎஸ் ரவிக்குமாரை சுடுவதற்குப் பதிலாக ஜெய்யை சுட்டுக் கொன்றுவிடுகிறார் காஜல். அதன் பின் காஜலை சில அமானுஷ்ய சக்திகள் தொந்தரவு செய்கிறது. இவை மூன்றுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடிக்க முயற்சி செய்கிறார் காஜல். ஆனால், அவர் ‘ஜில்லா’ படத்தின் இன்ஸ்பெக்டர் சாந்தி கதாபாத்திரத்தையே மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு, ஊர்வசி, சத்யன், ரெடின் கிங்ஸ்லி, ஜெகன் என பல நடிகர்கள், நடிகைகள் படத்தில் இருக்கிறார்கள். ஆனால், அலைபாயும் திரைக்கதையில் யாருடைய கதாபாத்திரமும் ஒட்டவில்லை. 

கிளைமாக்சுக்கு முன்பாக ஜெய் கதாபாத்திரம் மூலம் ஒரு தனிக்கதையை மீண்டும் சொல்லியிருக்கிறார்கள். ஒரே படத்தில் இரண்டு, மூன்று கதைகள் வருவதால் குழப்பம் வருவதுதான் மிச்சம்.