சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வரும் படம் ‘வாத்தி’. ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்

ஒரு சாதாரண மனிதனின் லட்சியப் பயணத்தை அறிவிக்கும் விதமாக இந்த படத்தின் டைட்டில் குறித்து இரு மொழிகளிலும் வெளியிடப்பட்ட வீடியோ, பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், கல்லூரி கதைக்களத்தில் ஒரு தனித்துவமான படமாக இருக்கும் என்பதையும் பறைசாற்றியது. அது மட்டுமல்ல இந்த படத்தின் டைட்டில் போஸ்டர்களும் தனுஷ் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தின. இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வாத்தி’ படத்தின்  முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது.

முதல் பார்வை போஸ்டரில் சுற்றிலும் உள்ள அலமாரிகளில் புத்தகங்களாக அடுக்கப்பட்டிருக்க, மேஜையின் மீது எரிந்து கொண்டிருக்கும் இரவு விளக்கின் வெளிச்சத்தில் தனுஷ் அமர்ந்து மும்முரமாக ஏதோ முக்கியமான அசைன்மென்ட் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு விரிவுரையாளராக தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் முதல் பார்வையைப் பார்க்கும்போது படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்த படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாளான இன்று வெளியானது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. 

படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி படம் பற்றி கூறுகையில்,

“இந்த படத்தில் தனுஷ் ஒரு விரிவுரையாதராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படம் கல்வி அமைப்பை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பில் தனுஷின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே நம்பமுடியாத ஒன்று. ஜி.வி பிரகாஷின் இசை யுவராஜின் ஒளிப்பதிவு இரண்டுமே இந்த படத்தின் மிக முக்கியமான அம்சங்களாக அமையும்,” என்றார்.

‘வாத்தி’ படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.