’சுறா’ குறித்து கருத்து: தமன்னா விளக்கம்

01 Apr 2024

‘சுறா’ படம் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.

எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், வடிவேலு, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சுறா’. இது விஜய் நடிப்பில் உருவான 50-வது படமாகும். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. மேலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு தமன்னா அளித்த பேட்டியில், ‘சுறா’ படம் தனக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதை வைத்து தமன்னாவை கடுமையாக விமர்சித்தார்கள்.

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தில் நடித்துள்ளார் தமன்னா. இதன் விளம்பரப்படுத்தும் பேட்டியொன்றில் ‘சுறா’ படத்தின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தமன்னா கூறியதாவது:

”நான் அப்படிச் சொல்லவில்லை. ‘சுறா’ படத்தில் எனது நடிப்பு பிடிக்கவில்லை என்று கூறினேன். எனது வார்த்தைகள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது. எந்தவொரு படமும் சரியாக ஓடவில்லை என்றால், அதில் நடித்த எந்தவொரு நடிகரும் அதற்கு சந்தோஷம் தான் என கூறமாட்டார். அதே வேளையில் படம் வெற்றியடைந்துவிட்டால், அதில் நடித்த நாட்களை மறக்க முடியாது என்று கூறுவார்கள். சுறா படத்தில் நடித்தது, விஜய்யுடன் நடனமாடியது அனைத்து சந்தோஷமே. நான் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் விஜய்யுடன் நடித்தது மிகவும் உதவியது. ”

இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.

Tags: sura, vijay, tammanah

Share via: