சிவகார்த்திகேயன் – விஜய் மகன் சந்திப்பு: நடந்தது என்ன?

01 Apr 2024

சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தினை இயக்கவுள்ளார் ஜேசன் சஞ்சய். இந்தப் படத்தின் அறிவிப்பு முதலிலேயே வெளியாகிவிட்டாலும், தற்போது தான் முதற்கட்டப் பணிகள் அனைத்தையும் முடித்துள்ளார் ஜேசன் விஜய். தனது முதல் படம் என்பதால் வெற்றியடைந்தே தீர வேண்டும் என்று நோக்கில் பணிபுரிந்து வருகிறார்,

சில மாதங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் – ஜேசன் சஞ்சய் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால், உண்மையில் நடந்தது என்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது.

லைகா நிறுவனத்துக்கு ஒரு படம் செய்ய சம்மதம் தெரிவித்திருந்தார் சிவகார்த்திகேயன். அது விக்னேஷ் சிவன் படமாக அறிவிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது. தற்போது அந்தக் கதையை தான் பிரதீப் ரங்கநாதனை நாயகனாக வைத்து இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.

சிவகார்த்திகேயன் கால்ஷீட் இருப்பதால் லைகா நிறுவனம் தான், ஜேசன் சஞ்சய் கதையினை அனுப்பியிருக்கிறது. விஜய் மகனின் கதை என்பதால் அவரும் உடனடியாக கேட்டிருக்கிறார். அப்போதே இந்தக் கதை தனது பாணியிலான ஜானரில் இல்லை என்று சொல்லிவிட்டாராம் சிவகார்த்திகேயன். அதையும் நேரடியாக சொல்லாமல் லைகா நிறுவனத்திடம் சொல்லியிருக்கிறார்.

அதுமட்டுமன்றி, ஜேசன் சஞ்சய் கதை மிகவும் அற்புதமாக இருக்கிறது. எனக்கு தான் சரியாக இருக்காது என்று சொல்கிறேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். சிவகார்த்திகேயனின் இந்த வார்த்தையால் மிகவும் சந்தோஷப்பட்டுள்ளார் ஜேசன் சஞ்சய்.

துருவ் விக்ரம், துல்கர் சல்மான் என பலருடைய பெயர் நாயகன் பெயரில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இவர்கள் யாருமே இந்தப் படத்தின் நாயகன் அல்ல. படத்தின் பட்ஜெட் பெரியது என்பதால், அதற்கு தகுந்த மாதிரியான நாயகனிடம் விரைவில் கதையைச் சொல்ல காத்திருக்கிறார் ஜேசன் சஞ்சய்.

Tags: sivakarthikeyan, jason sanjay, lyca , vijay

Share via: