அறிமுக இயக்குநர்களோடு பணிபுரிய மாட்டேன்: விஜய் தேவரகொண்டா

01 Apr 2024

அறிமுக இயக்குநர்களோடு பணிபுரிய மாட்டேன் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவருடைய ஆரம்பகாலகட்ட படங்கள் யாவுமே அறிமுக இயக்குநர்களோடு தான அமைந்தது. இதில் பல படங்கள் வரவேற்பைப் பெற்று, தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

தற்போது பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணால் தாகூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தி பேமிலி ஸ்டார்’. ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தினை பல்வேறு வழிகளில் விளம்பரம் செய்து வருகிறார்.

இந்தப் படம் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் விஜய் தேவரகொண்டா, இனி அறிமுக இயக்குநர்களோடு பணிபுரிய மாட்டேன் என்று கூறியிருப்பது ஆச்சரியத்தினை அளித்துள்ளது. அந்தப் பேட்டியில் விஜய் தேவரகொண்டா கூறியிருப்பதாவது:

“இப்போது அறிமுக இயக்குநர்களுடன் பணிபுரிவதில்லை. அவர்கள் குறைந்தபட்சம் ஒரு படமாவது இயக்கியிருக்க வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் பட்ஜெட், நடிகர்கள் உள்ளிட்டவற்றை கையாள தெரிந்திருக்க வேண்டும். ஒரு படம் இயக்கியிருந்தால் அவர்களுக்கு அது உதவியாக இருக்கும்.

என்னை பயன்படுத்திக் கொள்ள என் இயக்குநர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆகையால் அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்ற விரும்பவில்லை. ஒரு படம் இயக்கியிருந்த இயக்குநர்களாக இருந்தாலும், அவர்களது இசை, எடிட், கதை சொல்லும் முறை உள்ளிட்டவற்றை மிகவும் கவனிக்கிறேன். அவர்களின் முறை எனக்கு பிடித்திருந்தால், வேலை செய்ய தயாராகவே இருக்கிறேன்”

இவ்வாறு விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

Tags: vijay devarkonda

Share via: