லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க, சுபாஷ்கரன் வழங்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’.
 
இப்படத்தின் ‘பொன்னி நதி’ என்று தொடங்கும் பாடலின் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல மாலில் பொது மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. டிப்ஸ் ஆடியோ கம்பெனி இப்பாடலை வெளியிட்டுள்ளார்கள். 
நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி மற்றும் ஜெயராம் பேசினார்கள். 

நடிகர் ஜெயராம் பேசுகையில்,

“அனைவருக்கும் வணக்கம். இது மாதிரி அற்புதமான படத்தில் ஒரு சிறிய பகுதியாக பொன்னியின் செல்வன்-1 மற்றும் பொன்னியின் செல்வன் - 2, இரண்டிலும் நடித்ததில் மிகவும் பெருமை. அதற்கு லைகா சுபாஸ்கரனுக்கு நன்றி. பொன்னியின் செல்வன் என்பது ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் ஆழமாக எழுதப்பட்ட திரைக்கதை. ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆகையால், இதுபோன்ற மாபெரும் எதிர்பார்ப்பு இதற்கு முன் எந்த படத்திற்கும் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். அப்படி எல்லோருக்குள்ளும் இருக்கும் பொன்னியின் செல்வனின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. 

படத்தில் எனக்கு ஒரு சட்டை கூட கொடுக்கவில்லை. விளம்பரத்திற்காகவாது ஒரு சட்டை கொடுங்கள் என்று இந்த சட்டையை வாங்கி அணிந்து வந்தேன். தாய்லாந்தில் காலை 3.30 மணிக்கு படப்பிடிப்பிற்கு புறப்பட வேண்டும். படப்பிடிப்பு முடிந்ததும் நாளைக்கு வெறும் உடம்பில் நடிக்கும் காட்சி இருக்கிறது என்று மணி சார் சொல்லி அனுப்புவார். ஒரு நாளைக்கு கிட்டதட்ட 18 மணி நேரம் படப்பிடிப்பு நடக்கும். 6 மணியில் இருந்து 10 மணி வரை கார்த்தியும், ஜெயம் ரவியும் உடற்பயிற்சி செய்யும் சத்தம் கேட்கும். இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார்கள். ஆனால், எனக்கு சாப்பிட நன்றாக கொடுப்பார்கள். ஏனென்றால், எனக்கு தொப்பை வேண்டும். அவர்களுக்கு இருக்கக் கூடாது. படப்பிடிப்பு முழுவதும் உற்சாகமாக இருந்தது. 

ஏ.ஆர்.ரகுமான், ரவிவர்மன், தோட்டாதரணி அனைவரும் மணி சாருக்கு உறுதுணையாக இருந்தார்கள். இவர்களெல்லாம் சேர்ந்தது தான் பொன்னியின் செல்வன் - 1.  என் கேரக்டரான ஆழ்வார்க்கடியான் நம்பி உங்கள் மனதிலும் இருக்கும், நன்றி” என்றார்.