கேப்டன் இடத்தை எனது இரண்டு மகன்கள் நிரப்புவார்கள் - பிரேமலதா விஜயகாந்த்

17 May 2025

VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க,  ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில்,  U அன்பு இயக்கத்தில், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படம்  “படை தலைவன்”. 

வரும் மே 23 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், L.K. சுதீஷ், ஹீரோ சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், இயக்குநர் -நடிகர்கள் கஸ்தூரி ராஜா, சசிக்குமார்,  இயக்குநர்கள் A.R. முருகதாஸ், பொன்ராம் படத்தின் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம், இயக்குநர் .U.K. அன்பு, ஒளிப்பதிவாளர்  சுரேஷ், தயாரிப்பாளர்கள் T. சிவா, J.S.K. சதீஷ், நடிகை யாமினி மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வினில் 

வசனகர்த்தா பார்த்திபன் தேசிங்கு  பேசியதாவது….

சினிமாவில் என் மானசீக குரு, இன்ஸ்பிரேஷன் எல்லாமே  முருகதாஸ் சார்தான், அவரது ஆசீர்வாதத்துடன் இங்கு இருப்பது மகிழ்ச்சி. நான் கேப்டனின் தீவிர ரசிகன். அவரது கேப்டன் பிரபாகரன் பட தலைப்பைத் தான் என் முதல் கதைக்கு வைத்தேன் அது கிடைக்கவில்லை.  கேப்டன் உடன் வேலை பார்க்கும் எனும் என் ஆசை நிறைவேறவில்லை. படை தலைவன் வாய்ப்பு மூலம் அந்த கனவு நனவாகியுள்ளது.  இந்தப்படத்திற்குத் தலைப்பு படைத் தலைவன். ஒருவன் பின்னால் ஒரு படையே நிற்கும் என்றால், அவன் தான் படை தலைவன், அது கேப்டன் மட்டும் தான். அவருக்குப் பிறகு, அது சண்முக பாண்டியனுக்குத் தான் பொருத்தமாக அமைந்துள்ளது. இந்தக்கதையை அன்பு முதலில் சொன்ன போது, நான் இதற்கு வசனம் எழுதுவேன் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் நான் வேலை பார்த்தது எனக்குப் பெருமை. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 

ஒளிப்பதிவாளர் சதீஷ் குமார் பேசியதாவது…, 

நான் இங்கு கேப்டனுடன் எனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன், அவருடன் ஒரு ஸ்டண்ட் காட்சியில் பணி புரிந்தேன், பெரிய அனுபவம் இல்லை என்றாலும் அனைவரின் சொல்லுக்கும் மதிப்பளிப்பவர் எங்கள் கேப்டன் அதை நான் அன்று உணர்ந்தேன், அதே போல் சண்முக பாண்டியனும் பொறுமையாகக் கோபம் கொள்ளாமல், எத்தனை டேக் சென்றாலும் அதை முடித்துக் கொடுத்து விட்டுத் தான் அங்கிருந்து கிளம்புவார், அவரிடத்தில் நான் என் கேப்டன் சாரை பார்க்கிறேன்.  இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும், சண்முக பாண்டியன் அவர்களுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமையும் அனைவருக்கும் என் நன்றிகள். 

நடிகர் ரிஷி பேசியதாவது.., 

எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அன்புவிற்கு நன்றி என் தயாரிப்பாளர் அவர்களுக்கும் நன்றி, நான் ஆரம்ப காலத்தில் சினிமாவில் பணி புரியும்போது எல்லோரும் கேப்டன் சாரின் ஸ்டண்ட் பற்றித்தான் பேசுவார்கள், அவரை நேரில் பார்க்க வேண்டும் என பல நாட்கள் காத்திருந்தேன் ஆனால் அவர் மகனுடன் நடிக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. மிகவும் பெருமையாக இருக்கிறது, இந்தப் படத்தில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளேன், என் கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது, படம் பார்க்கும் போது  அது உங்களுக்குத் தெரியும். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தந்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும் நன்றி. 

நடிகை யாமினி சந்தர் பேசியதாவது…,

இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கேப்டன் சாரின் வாழ்த்து நமக்குக் கிடைத்துள்ளது அதுவே பெரிய பாக்கியம். இளையராஜா சார் பாடல்களில் நான் நடித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. சண்முக பாண்டியன் சார் எங்கள் அனைவரையும் அன்பாய் பார்த்துக்கொண்டார். இதில் எங்களை விட,  யானையுடன் தான் அவர் அதிக காட்சிகள் நடித்துள்ளார். இருவரும் இணை பிரியா நண்பர்கள் ஆகிவிட்டனர். இந்தப் படமும் அவர்களைப் பற்றித் தான்.  நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர், நடிகர் கஸ்தூரி ராஜா பேசியதாவது…, 

படத்தின் தலைப்பே படத்திற்கு யானை பலம், அதை விட முக்கியம் கேப்டனின் ஆசீர்வாதம், அவருடன் எனக்குப் பல அனுபவங்கள் உண்டு, அதைச் சொல்ல எத்தனை மேடைகள் இருந்தாலும் பத்தாது. இந்தப் படத்தில் ஓய்வின்றி கடினமாக உழைத்தவர் ஒளிப்பதிவாளர் தான், கஷ்ட பட்டு காட்சிகளை வடிவமைத்துள்ளார் வாழ்த்துக்கள். சண்முக பாண்டியன் யானையுடன்  இணைந்து செய்த காரியங்களுக்கு எல்லாம் அசாத்திய தைரியம் தேவை, அதற்கு என் கேப்டன் தான் காரணம், அவரின் அதே பாணியை இவரிடமும் கண்டேன். படப்பிடிப்பில் இப்படக்குழு பல சிரமங்களைச் சந்தித்தனர், அத்தனையும் தாண்டி இந்தப் படம் இங்கு வந்ததற்குக் காரணம் இயக்குநரும் தயாரிப்பாளரும் தான். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்தப் படத்திற்கு இசையமைத்தது இளையராஜா இந்தப் பெயரே போதும், அந்த இசையைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை,  நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி. 

தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ் பேசியதாவது…, 

இந்தப் படத்தைத் தயாரித்த பரமசிவம் எனக்கு 25 ஆண்டு கால நண்பர், அவருடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன், அதனால் சொல்கிறேன் இந்தப் படம் இந்தியாவே பேசும் ஒரு படைப்பாக இருக்கும். கேப்டனின் ரசிகர்களுக்கு இன்னும் பெரிய விருந்து காத்திருக்கிறது. படத்தின் காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்துள்ளது, சண்முக பாண்டியன் பற்றி நான் சொல்ல தேவையில்லை, கேப்டனின் ரத்தம் அது அப்படியே இவரிடம் உள்ளது. அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகள். படக்குழு அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அம்மா கிரியேஷன் டி சிவா பேசியதாவது.., 

கேப்டன் சாரை போல மற்றொருவரைப் பார்க்க வேண்டுமெனில் அது சண்முக பாண்டியன் தான், கேப்டனின் தன்மை அப்படியே அவரிடம் உள்ளது.  அது செட்டில் இருந்த அனைவருக்கும் தெரியும். சண்முக பாண்டியனின் வெற்றிக்கு மிகவும் சந்தோஷபடுபவன் நான்தான்.  நிச்சயம் நாம் அதைப் பார்க்கப் போகிறோம், இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நன்றி. 

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்  சங்கத் தலைவர் ஶ்ரீதர் பேசியதாவது…, 

இந்த காலத்தில் பெரிய நடிகர்கள் படம் என்று ஒரு சில படங்கள் மட்டும் தான் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் மற்ற நேரங்களில் சிறு படங்கள்தான் திரையரங்கை வாழ வைத்துக் கொண்டுள்ளது, இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இந்தப் படம் இருக்கும். கேப்டனின் ஆசிர்வாதம் சண்முக பாண்டியனுக்கு உள்ளது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்  நன்றி. 

இயக்குநர் பொன்ராம் பேசியதாவது…, 

எனக்கு சண்முக பாண்டியனைப் பார்க்கும்போது அவர் தெரியவில்லை கேப்டன் தான் தெரிந்தார்.  அவரது இடத்தை  யாராலும் இன்று வரை அடைய முடியவில்லை, அதைச் சண்முக பாண்டியன் அடைவார். அவரை பிரேமில் வைக்கும்போது அப்படி ஒரு பிரம்மாண்டம், படம் பார்க்கும்போது உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவருக்கும் வாழ்த்துக்கள், பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளீர்கள் என்று டிரெய்லர் பார்க்கும்போதே தெரிகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள், நன்றி. 

எல் கே சுதீஷ் பேசியதாவது…, 

இந்தப் படம் சண்முக பாண்டியனுக்கு பெரிய வெற்றிப்படமாக அமையும். கேப்டனின் ஆசீர்வாதம் இந்தப் படத்திற்கு உள்ளது. அது மட்டுமல்ல, இந்தப் படத்தை வாழ்த்த பல நல் உள்ளங்கள் இங்கு வந்துள்ளனர். அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் வெள்ளி விழாவில் அனைவரும் சந்திப்போம், நன்றி. 

தே.மு.தி.க மாநில இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் பேசியதாவது…, 

இந்த மேடையில் நான் ஒரு ரசிகனாக தான் வந்துள்ளேன், சினிமா மேடையில் நான் பேசியது இல்லை, இது எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது, நான் என் தம்பிக்காக வந்திருக்கிறேன்.  என் அப்பா விஜயகாந்திற்கு நான் தான் முதல் ரசிகன், அதே போல் சண்முக பாண்டியனுக்கும் நான் தான் முதல் ரசிகன், கேப்டனை நீங்கள் பார்க்க நினைத்தால் சண்முக பாண்டியன் உருவத்தில் நாம் அவரை பார்க்கலாம். கேப்டனின் கட்டளைகள் பணிகள் இன்னும் காத்திருக்கிறது. அவரின் அனைத்து ஆசையும் நடக்கும் நாம் நடத்திக் காட்டுவோம். மேலும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் அது ஒரு வரம் தான். படம் மிக  நன்றாக இருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், இந்தப் படத்தை நாம் அனைவரும் சுமந்து செல்வோம் அனைவருக்கும் நன்றி. 

நடிகர் சசிகுமார் பேசியதாவது…, 

விஜயகாந்த் சார் எங்கள் மண்ணின் மைந்தன் , அவரை இயக்கும் ஆசை எனக்கு நிறைவேறாமல் போனது, ஆனால் சண்முக பாண்டியனை இயக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஒரு ஷூட்டிங்கில் அவரது கண்ணைப் பார்த்து மிரண்டு விட்டேன், அப்படியே விஜய்காந்த் சார் தான். கண்டிப்பாகச் சண்முக பாண்டியனை நான் இயக்குவேன். கேப்டன் சாருடன் பயணிக்கும் அனுபவம் இல்லை, ஆனால் நிச்சயம் அவரது மகனுடன் அந்த அனுபவத்தைப் பெறுவேன்.  இந்தப் படை தலைவன் படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும்.  அனைவருக்கும் நன்றி. 

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது..,

அரசியல் மேடை இல்லாமல் ஒரு சினிமா சார்ந்த மேடையில் நான் பேசுவது இதுவே முதல்முறை. சண்முக பாண்டியனை இனிமேல் உங்களிடம் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடமும், சினிமா துறை சார்ந்தவர்களிடமும் ஒப்படைக்கிறேன். கள்ளழகர் படத்தில் நடித்த போது, கேப்டன் யானையோடு நெருக்கமாக பழகி, வீட்டிற்கு யானையை அழைத்து வரவா ? என்று கேட்டார், அவ்வளவு பெரிய வீடு இல்லையே என்று கூறினேன். அதேபோன்று தான் சண்முக பாண்டியனும், தற்போது அவருடன் நடித்த மணியன் யானையை வீட்டிற்கு அழைத்து வரக் கேட்டார். இருவரும் யானை வளர்க்கவே விரும்புகின்றனர். நிச்சயம் ஒரு யானையை வளர்ப்போம். கேப்டனின் இடத்தை எனது இரண்டு மகன்களும் நிரப்புவார்கள். விஜய பிரபாகரன் அரசியலிலும், சண்முக பாண்டியன் சினிமாவிலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்வார்கள். அதில் எந்த ஐயமும் இல்லை" இப்படம் மக்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

Tags: padaithalaivan, ilaiyaraja, shanmugapandian, anbu

Share via:

Movies Released On May 19