மாஃபியா - இரண்டு வலிமையானவர்களின் சண்டை

04 Feb 2020

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில், அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மா1பியா’.

இப்படத்தின் டீசர்கள் வெளியான பின் படம் மீதான எதிர்ப்பு அதிகமாகி உள்ளது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தைப் பற்றி படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியதாவது,

 “மாஃபியா - பாகம் 1 “என்னோட 3 வது படம். போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. 

இரு வலிமையான கதாபாத்திரங்கள் இடையே ஒரு ‘கேட் அண்ட் மவுஸ் கேம்’ நடக்குற மாதிரியான கதை தான் இந்தப்படம்.  இரண்டு வேறு வேறு குணங்கள்  கொண்ட கதாப்பாத்திரங்கள் இடையே நடக்கிற போர் தான் இந்தப்படத்தின் மையக்கதை. 

இப்படம்   நான் - லீனியர் முறையில நடப்பதாகக் கதை  அமைக்கப்பட்டுள்ளது. படத்தில்  நான்கு பாடல்கள் இருக்கிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் திரைக்கதையோட சம்பந்தபட்டதாதான் இருக்கும், தனியா இருக்காது. 

அருண் விஜய் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியா நடிச்சிருக்கார். அவரால் எல்லாவிதமான கேரக்டரும் பண்ண முடியும்னு நான் நினைக்கிறேன். அவருக்கு அந்தளவு திறமை இருக்கிறது. 

பிரசன்னாவின் கேரக்டர் இந்தப் படத்தில் அடக்கி வாசிக்கிற மாதிரியானது. ஆனா நடிப்பில் கலக்கியிருக்கிறார். 

பிரியா பாவானி சங்கர் போலீஸ் அதிகாரியா வருகிறார். அவருக்கு  முன்னாடி வேற ஹீரோயின்களும் பார்த்தோம். ஆனா, இந்தக் கேரக்டருக்கு அவர் தான்  பொருத்தமா இருப்பார் என்று  மொத்த படக்குழுவும் சொன்னதால்  அவங்களைத் தேர்ந்தெடுத்தோம்.  அவரும்  நல்லாவே நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில்  எல்லாம் நடித்திருக்கிறார். இந்த ரோல் அவருக்கு புது மாதிரியா இருக்கும்.  

படத்தில் நிறைய சின்ன கதாபாத்திரங்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக  இருக்கும். 

பிப்ரவரி 5ம் தேதி இந்தப் படத்தின் முதல் பாடலை வெளியிட இருக்கிறோம். முழுக்க சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். மூன்று நாட்கள் மட்டும் தாய்லாந்தில் எடுத்திருக்கிறோம். பட வேலைகள் மொத்தமாக முடிந்து விட்டது. வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக  நடந்து வருகிறது,” என்றார்.

Tags: mafia, karthick naren, arun vijay

Share via: