தமிழில் நடிக்க விரும்பும் கோமலி பிரசாத்

14 May 2025

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை கோமலி பிரசாத் தமிழில் நடிக்க விரும்புகிறார்.

'HIT 3' படத்தில் ASP வர்ஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், இந்த பாத்திரம் தனக்கு ஒரு பெரிய சவால் என்றும் அதே நேரம் மகிழ்ச்சியான அனுபவம் என்றும் கூறுகிறார். "இந்த ஆக்ஷன்-பேக் பாத்திரத்திற்கு ரசிகர்கள் காட்டிய அன்பு என்னை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியது" என்கிறார் கோமலி.

நடிகர் நானியுடன் இணைந்து பணியாற்றியதை ஒரு மறக்கமுடியாத அனுபவமாக குறிப்பிடுகிறார் கோமலி. "நானி சார் ஒரு வாழ்க்கை பாடநூல். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்" என்கிறார். ஆக்ஷன் காட்சிகளுக்காக தேசிய அளவிலான பாக்ஸர் அனிலிடம் கடுமையான பயிற்சி எடுத்ததாகவும் தனது உயரம் குறைவாக இருந்தாலும், அதை சவாலாக ஏற்று செயல்பட்டதாகவும் கூறுகிறார்.

நடிகையாக மட்டுமல்லாது பல் மருத்துவர், தேசிய அளவிலான விளையாட்டு வீரர் மற்றும் நடனக் கலைஞர் என பல திறமைகளை கொண்டவர் கோமலி. "கோ-கோ மாநில அளவிலும், பேட்மிண்டன் பல்கலைக்கழக அளவிலும் விளையாடியிருக்கிறேன். இந்த விளையாட்டு பயிற்சி தான் காயங்களுக்கிடையேயும் ஷூட்டிங்கில் நடிக்க உதவியது" என்கிறார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்டால், "எனது செல்ல நாய் விஸ்கியுடன் நேரம் செலவிடுவது, சமையல் செய்வது, ஓவியம் வரைவது, பயணம் செய்வது ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தமானவை. நான் ஒரு மிகவும் எளிமையான நபர்" என்கிறார் கோமலி.

எதிர்காலத்தில் நடிக்க விரும்பும் பாத்திரங்கள் குறித்து கேட்டால், "ரொமாண்டிக் கதைகள் அல்லது குடும்ப நாடகங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு அல்லது இராணுவப் பெண்ணாக நடிப்பது என் கனவு" என்கிறார்.

தமிழ் சினிமா மீதான தனது ஆர்வத்தை பகிர்ந்து கொள்கிறார் கோமலி: "'நானும் ரெளடிதான்' படத்தின் 'நீயும் நானும்...' பாடல் எனது ரிங்டோனாக இருக்கிறது. தமிழ் மொழியை சரளமாக பேச கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் பணியாற்ற விரும்பும் இயக்குநர்கள் பட்டியலில் சி. பிரேம்குமார், அல்ஃபோன்ஸ் புத்திரன், மணிகண்டன் மற்றும் GVM ஆகியோர் உள்ளனர். விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற நடிகர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஆனால் அஜித் சார் எப்போதும் எனது ஃபேவரிட். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார் கோமலி பிரசாத்.

Tags: komali prasad

Share via: