நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நேற்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் கதாநாயகியாக நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ என்ற படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் சார்பில் பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.சௌத்ரி இப்படத்தைத் தயாரிக்கிறார். ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய கின்ஸ்லின் இப்படத்தை இயக்குகிறார்.
பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ளது. படத்தின் கதையைக் கேட்டதுமே ஐஸ்வர்யா நடிக்க சம்மதித்துவிட்டாராம்.
இன்றைய கால கட்டத்தில், நம் தினசரி வாழ்க்கையில், கால் டாக்ஸி டிரைவர்களைக் கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால் டாக்ஸி டிரைவரை, மையமாகக் கொண்ட கிரைம் திரில்லர் கதையாக இப்படம் உருவாக உள்ளதாம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி டிரைவராக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.