ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’
01 Mar 2024
ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணியில் உருவான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. அதுமட்டுமன்றி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என இந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இலங்கை, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. தற்போது அடுத்த சாதனையையும் ‘த்ரிஷ்யம்’ படம் நிகழ்த்தி இருக்கிறது.
இந்தியாவில் இருந்து ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் படமாக ‘த்ரிஷ்யம்’ அமைந்திருக்கிறது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்த பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் சர்வதேச ரீமேக் உரிமைகளைக் கைப்பற்றி பணிபுரிந்து வருகிறது.
கொரியா மற்றும் ஹாலிவுட்டில் ‘த்ரிஷ்யம்’ படத்தினை ரீமேக் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதனைத் தொடர்ந்து மேலும் 10 நாடுகளில் இதனை ரீமேக் செய்ய இருப்பதாகவும் பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
‘த்ரிஷ்யம்’ முதல் பாகம் மட்டுமன்றி 2-ம் பாகத்தின் ரீமேக் உரிமையையும் பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags: drishyam, hollywood, mohanlal, jeethu joseph