பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார், அவருக்கு வயது 54.

90களில் வெளிவந்த க்ரைம் நாவல் புத்தகங்களில் கே.வி.ஆனந்த் எடுத்த புகைப்படங்கள், அட்டைப் படங்களாக வந்து அவரைப் பற்றிப் பேச வைத்தது.

அதன்பின் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக இணைந்து பணியாற்றினார்.

1994ம் ஆண்டு வெளிவந்த மலையாளப் படமான ‘தேன்மாவின் கொம்பத்து’ படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். ஒளிப்பதிவாளராக அறிமுகமான முதல் படமான ‘தேன்மாவின் கொம்பத்து’ படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றவர். அடுத்து தெலுங்கிலும் ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பின்னர் 1996ம் ஆண்டு வெளிவந்த ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

தொடர்ந்து “நேருக்கு நேர், முதல்வன், விரும்புகிறேன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி” ஆகிய படங்களுக்கும் ஹிந்தியில் “ஜோஷ், நாயக், தி லெஜன்ட் ஆப் பகத்சிங், காக்கி” ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

2005ம் ஆண்டு ‘கனா கண்டேன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ‘அயன், கோ’ ஆகிய இரண்டு சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார். பின்னர் ‘மாற்றான், அனேகன், கவண், காப்பான்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

அடுத்து ஒரு படத்தை இயக்குவதற்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் அவரது திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திரைப் பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கே.வி.ஆனந்த் இயக்கிய தமிழ்ப் படங்கள்...