வெற்றிமாறன் கதை வசனத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘அதிகாரம்’

25 Jun 2021

தமிழ் சினிமாவில் தற்போது வெற்றிகரமான இயக்குனராக இருக்கும் வெற்றிமாறனை ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் கதிரேசன்.

அவரது பைவ் ஸ்டார் கிரியேஷ்ன்ஸ் நிறுவனம் சார்பில் அந்தப் படத்தையும், அடுத்து வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். 

இயக்குனர் வெற்றிமாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் சார்பில், 'உதயம்', 'காக்காமுட்டை', 'விசாரணை', 'வட சென்னை' போன்ற படங்களைத் தயாரித்தார். 

இப்போது பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் - கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி ஆகியவை இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ‘அதிகாரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு  வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

இப்படம் மூலம் பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் - வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள்.

பிரம்மாண்ட படைப்பாக பான்-இந்தியா படமாகத் தயாராகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.  ஏற்கெனவே இவர் இதே பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

‘அதிகாரம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பை,  வெற்றிமாறனின் உதவியாளர் R.S.துரை செந்தில்குமார் ஏற்றுள்ளார். ‘எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு’ ஆகிய படங்களை இயக்கியவர் இவர்.

இந்த வருடத்தின் கடைசியில் ஆரம்பமாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும்  நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

Tags: adhigaaram, vetri maaran, raghawa lawrence, kathiresan, durai senthilkumar

Share via: